பதிவு செய்த நாள்
29
ஆக
2017
12:08
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிவசேனா சார்பில் 21 சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அவற்றை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று, கோட்டை குளத்தில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தை சுரபி கல்வி நிறுவனர் ஜோதிமுருகன் துவக்கி வைத்தார்.
பழநி: பழநியில் இந்துமுன்னணி, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் பழநி, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி உள்பட பலபகுதியில் இருந்தும் 140க்கும் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அவை அனைத்தும் நேற்று பாதவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சண்முகநதியில் கரைக்கப்பட்டன. மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், செயலாளர் பாலன், மாநில நிர்வாகி குற்றாலநாதன் பங்கேற்றனர். இதேபோல விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் செந்தில்குமார், பா.ஜ., செயலாளர் கனகராஜ் பங்கேற்றனர். பழநி சப்கலெக்டர் வினித், தாசில்தார் ராஜேந்திரன், திண்டுக்கல் எஸ்.பி.,சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
வடமதுரை: இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகளை ஊர்வலத்திற்கு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து காலை 11:00 மணிக்கு மேல் மாலை 5:00 மணிக்குள் ஊர்வலத்தை முடிக்க வேண்டும் என்ற நிபந்தையுடன் அனுமதி தரப்பட்டது. இக்கட்சி சார்பில் வடமதுரை, ரெட்டியபட்டி, மோர்பட்டி, பால்கேணிமேடு, நொச்சிகுளத்துபட்டி என 12 இடங்களில் கடந்த 25ம் தேதி விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. இவற்றை தேரடி வீதிகளை சுற்றி ஊர்வலமாக சென்ற பின்னர் நரிப்பாறை குளத்தில் கரைக்கப்பட்டன. எரியோடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் எரியோடு பஸ் ஸ்டாப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அய்யலுார், வடமதுரை, திண்டுக்கல் ரோடுகள் வழியே ஊர்வலம் சென்ற பின்னர், வைவேஸ்புரம், புதுரோடு, கோவிலுார் வழியே ஆர்.கோம்பை தடுப்பணையில் கரைக்கப்பட்டன.வேடசந்துார்: இந்து மக்கள் கட்சி சார்பில் ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், சிறப்பு பூஜைக்கு பிறகு ஊர்வலமாக வாகனங்களில் எடுத்துவரப்பட்டன. பிறகு வேடசந்துார் ஆர்.எச்., காலனியில் நடந்த விழாவிற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ரவிக்குமார், ரவிபாலன் முன்னிலை வகித்தனர். விநாயகர் ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்று அழகாபுரி அணைப்பகுதியில் சிலைகள் கரைக்கப்பட்டன.
சாணார்பட்டி: இந்து முன்னணி சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். அதிகாரிபட்டி, ஜெ.ஜெ., நகர், கம்பிளியம்பட்டி, கள்ளன்புதுார், வீரசின்னம்பட்டி, பெத்தாம்பட்டி பகுதிகளில் இருந்து சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. சாணார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே துவங்கிய ஊர்வலம் மல்லாத்தான் பாறை சென்றது. அப்பகுதி சிவன் கோயில் அருகே உள்ள குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது.