பதிவு செய்த நாள்
29
ஆக
2017
03:08
ஒரு விவசாயி தன் வீட்டு புறாக்களுக்கு தினமும் தானியம் போடுவார். இதை கவனித்தது காகம் ஒன்று. தானியங்களை அள்ளிச்சென்றது. விவசாயி அதை விரட்டுவார் ஆனாலும் தினமும் அது வந்ததால், கல்லை எடுத்து எறிய ஆரம்பித்தார். காகம் பயந்து போய் ஓரமாக நின்று, புறாக்கள் சாப்பிடுவதை வயிற்றெரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஒருநாள் அதன் மனதில் ஒரு யோசனை தோன்றியது. புறா போல் வேஷம் போட்டு, அவற்றோடு கலந்து தானியங்களை சுவைத்தால் என்ன என்று எண்ணியது. ஒரு சுண்ணாம்பு காளவாசலுக்கு சென்று அங்கே படுத்து உருண்டது. அதன் உடல் வெண்மையானது. விவசாயியின் தோட்டத்திற்கு வந்து புறாக்களோடு கலந்து நின்று, இஷ்டம் போல் தானியங்களை தின்றது. ஒருநாள், செத்த எலி ஒன்றை தின்ன காகங்கள் திரண்டு வந்தன. ஜென்மபுத்தி மாறாத திருட்டு காகம், தன் கூட்டத்தோடு போய் சேர்ந்து, எலியை கொத்த ஆரம்பித்தது. வித்தியாசமான நிறத்தில் வந்த காகத்தை, அடையாளம் தெரியாத மற்ற காகங்கள் கொத்தி விரட்டின. இதை விவசாயி கவனித்து விட்டார். வெள்ளை காகம் மீண்டும் தோட்டத்திற்கு வந்து புறாக்களுடன் கலந்து நின்றது.
மறைந்திருந்த விவசாயி, ஒரு கோலை எடுத்து வெள்ளை காகத்தின் மீது வீச, அதன் இறக்கை ஒடிந்தது. அது பறக்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்டது. பவுல் என்ற அப்போஸ்தலர் தனது விசுவாசி களிடம், நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த
வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதனாலே மறுரூபமாகுங்கள், என்றார். இதன் விளக்கம் இதுதான். ஆளுக்கு தகுந்தாற் போல் பேசுவது, நடிப்பது ஆகியவற்றை கைவிடுங்கள் தேவனுக்கு எது பிடிக்குமோ, அதை செய்யுங்கள். சரிதானே!