பதிவு செய்த நாள்
30
ஆக
2017
12:08
திருத்தணி: முருகன் மலைக்கோவிலில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், ஒரு வாரம் நடந்த ஜாத்திரை விழா, நேற்றுடன் நிறைவு அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் பின்புறத்தில் படவேட்டம்மன் மற்றும் ஏகாதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், முருகன் கோவிலின் உபகோவிலாகும். ஆண்டுதோறும் இக்கோவிலில்களில், ஜாத்திரை விழா ஒரு வாரம் வெகு விமரிச்சையாக நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஜாத்திரை விழா, கடந்த, 21ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும், காலை மற்றும் மாலை நேரத்தில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வந்தது. இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜாத்திரை விழாவின் நிறைவு நாளான நேற்று, காலையில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, பூ கரகத்துடன் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலை, ஊஞ்சல் சேவையுடன் இந்தாண்டிற்கான ஜாத்திரை விழா நிறைவு பெறுகிறது. நேற்று நடந்த ஜாத்திரை விழாவில், முருகன் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.