பதிவு செய்த நாள்
30
ஆக
2017
11:08
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே, வழிபாட்டில் வைக்கப்பட்டிருந்த சிலை, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சமண தீர்த்தங்கரர் சிலை என்பதும், அதன் வரலாறும் தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், ஊத்தங்கரை அடுத்த ராமகிருஷ்ணம்பதி கிராமத்தில், கள ஆய்வு சென்றனர். அங்கு, 1,100 ஆண்டுகள் பழமையான சமண தீர்த்தங்கரர் சிலை குறித்தும், அதன் வரலாறு குறித்தும் கண்டுபிடித்தனர். இந்த சிலை, நாக்பூரில் இருந்து ராமகிருஷ்ணம்பதிக்கு கொண்டு வரப்பட்டு, தற்போது வழிபாட்டில் இருந்து வருகிறது.
இதுகுறித்து, பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், ராமகிருஷ்ணம்பதியை சேர்ந்த மணி என்பவர் நாக்பூரில் பணிபுரிந்தார். அங்கு புறநகர் பகுதி ஆற்றங்கரையோரத்தில், கேட்பாரற்று கிடந்த அந்த சிலையை மீட்டெடுத்து, நாக்பூரில் உள்ள தன் வீட்டில் வைத்து, வழிபாடு செய்து வந்தார். பின், தமிழகம் திரும்பும்போது அதை விட்டு வர மனமில்லாமல், தன் சொந்த ஊரான ராமகிருஷ்ணம்பதிக்கு கொண்டு வந்து, ஏற்கனவே இருந்த நடுகல்லுக்கு நடுவில் வைத்து, ஊர் மக்கள் வழிபட ஏற்பாடு செய்துள்ளார். இந்த சிலை, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி., ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த சிலை, 2.5 அடி உயரம் கொண்ட கருங்கல்லில், புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, வடஇந்திய கலைப்பாணியில் அமைந்த சமண முனிவர் என்பதும், அது சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் சிலை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர், ஆதிநாதர் என்றும் ரிஷபதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். காளை இவருடைய சின்னமாகும். இவ்வாறு அவர் கூறினார்.