சிவகாசி:சிவகாசி நகராட்சி சுவர்களில் வரையப்பட்ட கலை ஓவியங்கள் பராமரிப்பின்றி இரு ப்பதால் அழியும் தருவாயில் உள்ளது.சிவகாசி நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சுவர்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஆக்கிமிரப்பு செய்திருந்தன. இஷ்டத்திற்கு சுவர்களை அசிங்கப்படுத்தி வந்தனர். இதற்கு மாற்று ஏற்பாடாக தொண்டு நிறுவன உதவியுடன் நகராட்சி நிர்வாகத்தால் ரூ. பல லட்சங்கள் செலவழித்து சுவர்களை அழகுப்படுத்தியது. தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் விதத்தில் ஓவியர்கள் கொண்டு சீர்மிகு படங்களை வரைந்தனர். அனைத்து படங்களும் தத்ரூபமாக காட்சி அளித்தது. இதன் மூலம் பள்ளி குழந்தைகள் எளிதாக நம் மாநிலத்தின் பாரம்பரியத்தை அறிந்து கொண்டனர். போஸ் டர்கள் ஒட்டப்படுவதும் நிரந்தரமாக ஒழிந்தது. இத்திட்டம் நகராட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கண்டுகொள்வதில்லை: நகராட்சி சுவர்கள் போன்று திருத்தங்கல் நகராட்சி மற்றும் சிவகாசி ஒன்றிய சுவர்களில் அழகிய கலை ஓவியங்கள் வரைய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் அதிகாரிகளிடத்தில் ஆர்வமில்லாததால் அரசு சுவர்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. சிவகாசி ஒன்றிய, தாலுகா அலுவலக சுற்றுச் சுவர்களில் விளம்பரம் செய்ய கூடாது என அறிவிப்பு இருந்தபோதிலும், எந்த அரசியல் கட்சியும், தனியார் தொழில் நிறுவனங்களும் கண்டுகொள்வதில்லை. இதேப்போன்று திருத்தங்கல் நகராட்சி சுவர்களில் அதிகமாக அரசியல் கட்சிகளின் விளம்பர போஸ்டர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. விளம்பர போஸ்டர்களை ஒட்டிய நபர்கள் மீது
சம்பந்தப்பட்ட அரசு: அதிகாரிகள் பெயரளவிற்கு கூட போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் சிவகாசி நகராட்சி சுவர்களில் வரைந்த ஓவியங்கள் காற்று, மழைக்கு தாங்காமல் அழிந்து வருகிறது. நகராட்சியும் படங்களை வரைந்தகையோடு பணிகளை முடித்துக்கொண்டன. அதனால் ஓவியங்கள் பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. பல இடங்களில் ஓவி யங்கள் மீதே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் ஓவியங்கள் வரைந்த சுவடே தெரியவில்லை. இதற்கு தீர்வாக நகராட்சி குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கி ஓவியங்களை பராமரிப்புடன் காப்பாற்றி, புனரமைக்க வேண்டும்.
இதுவும் நமது கடமை: சமூக ஆர்வலர் முருகேசன் கூறுகையில், “ அரசு சுவர்கள் வீடுகள் போன்று பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அரசு அதிகாரிகளிடம் உருவாக வேண்டும். ரெகுலர் பணிகள் மட்டும் செய்தால் போதாது. அரசு சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை அதிகாரிகளுக்கு உண்டு. சிவகாசி பகுதிகளில் உள்ள அரசு சுவர்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களையும், தனியார் தொழில் நிறுவனங்கள் விளம்பரங்களையும் அழிக்க வேண்டும். விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் நபர்கள் மீது போலீசில் புகார் கொடுக்க வேண்டும். அரசு சுவர்கள் அனைத்திலும் நமது பாரம்பரிய த்தை நினைவுப்படுத்தும் வகையில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்ட வேண்டும்,” என்றார்.