கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வரும் செப்., 15 அன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. யாகசாலை பூஜைகள் செப்., 11 முதல் துவங்கப்பட உள்ளது. கடந்த 2005 மார்ச் 13 அன்று கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டு முதல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, வல்லபை ஐயப்பன் சன்னதி முழுவதும் வேலைப்பாடு அமைக்கப்பட்ட கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 4, 2017ல் 33 அடி உயரமுள்ள தேக்குமரத்தால் ஆன கொடிமரம் தங்கமுலாம் பூசப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் தலைமை குருசாமி மோகன்சுவாமி கூறியதாவது:சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள வடிவமைப்பை போன்று இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை கண்டரரு ராஜூவரு தந்திரியால் நடத்தி வைக்கப்பட உள்ளது. பக்தர்கள் புனித நீராடும் பஸ்மக்குளம், ஆன்மிக பொது நுாலகம், தியான மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. கும்பாபிஷேகத்திற்கு பின்னர் கோயிலில் தினமும் அன்னதானம் நடக்கும் என்றார். ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.