பதிவு செய்த நாள்
31
ஆக
2017
12:08
புதுச்சேரி: மொரட்டாண்டி சனி பகவான் கோவிலில், செப்., 2ம் தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது. குரு பகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு, வரும் செப்., 2ம் தேதி பிரவேசிக்கிறார். அதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள 27 அடி உயர பஞ்சலோக சனீஸ்வர பகவான் கோவிலில், குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. செப்., 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், 1008 கொழுக்கட்டை நைவேத்தியம் நடக்கிறது. குருபெயர்ச்சி தினமான 2ம் தேதி காலை, குருசாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர, ராசி, தட்சிணாமூர்த்தி ஹோமங்கள் நடக்கிறது. 1008 லிட்டர் பால் அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு கலச அபிஷேகம், 1008 கிலோ சுண்டல் நிவேதனம் நடக்கிறது. செப்., 15ம் தேதி வரை, தினமும் லட்சார்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீ லலிதாம்பிகை வேதசிவாகம டிரஸ்ட் நிறுவனர்கள் சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.