பதிவு செய்த நாள்
01
செப்
2017
02:09
சென்னிமலை: சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதுரை மாநகரில், ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து, விற்று பிழைத்து வந்தார். வைகை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் துன்பமடைந்து, பாண்டிய மன்னனிடம் முறையிட்டனர். அப்போது அரசன், உடனடியாக மந்திரியை அழைத்து, வீட்டுக்கு ஒருவர், வைகை கரைக்கு சென்று, கரையை அடைக்க உத்தரவிட்டான். முதுமையால் வந்தி மூதாட்டி, செல்ல முடியவில்லை. இதற்காக கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், எந்நேரமும் தான் போற்றும் சிவபெருமானை வணங்கினார். அப்போது சுந்தரேச பெருமான், கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன் தோன்றினார். பிட்டு உணவையே, கூலியாக பெற்று கொள்வதாக, வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார். அப்போது அவர் முதுகில் வாங்கிய அடி, அனைவருக்கும் விழுந்தது. இறுதியில் வந்தி மூதாட்டிக்கும், பாண்டிய மன்னனுக்கும், சிவபெருமான் தரிசனம் தந்தார். அந்த நாளே, ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுகிறது. சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், இவ்விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இதன்படி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சென்னிமலை பார்க் ரோட்டில், வைகை கரை போல் அமைக்கப்பட்டிருந்தது. மாலையில் வைகை கரைக்கு கைலாசநாதர், அலமேலுமங்கை மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தேரில் வந்தனர். கோவில் குருக்கள் ரமேஷ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஓதுவார் மூர்த்தி ஆனந்த், சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.