பதிவு செய்த நாள்
02
செப்
2017
12:09
செங்கல்பட்டு : செட்டிப்புண்ணியம், ஹயக்ரீவருக்கு வரும், 4ம் தேதி, ஜெயந்தி விழா நடக்கிறது. செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம் கிராமத்தில், வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, கடலுார் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள், தேவநாதனுடைய அதி சுந்தரமான பிரயோக சக்கரத்துடன் கூடிய உற்சவர் மற்றும் தேசிகரால் பூஜிக்கப்பட்ட யோக ஹயகிரீவரையும் எடுத்து வந்து அமைக்கப்பட்டது.இப்பெருமாள் நித்ய ஆராதனத்துடன், 1848ம் ஆண்டு, இவ்வூருக்கு எழுந்தருளினார். இவருடன், யோகஹயக்ரீவரும் எடுத்து வரப்பட்டார்.இங்கு, மாணவ, மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, வெற்றி பெறுவதற்காக, இக்கோவிலில் கல்விக் கடவுளாக விளங்கும், ஸ்ரீவேதாந்த தேசிகர் பூஜை செய்த, ஸ்ரீ யோக ஹயக்ரீவர் சுவாமிக்கு, ஆண்டுதோறும், ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை மற்றும் ஜெயந்தி விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி விழா, 4ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில், மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.