பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
திருப்பதி: திருமலை தேவஸ்தானம், ஆந்திர அறநிலையத்துறைக்கு, 70 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. ஆந்திராவில் உள்ள கோவில்கள் அனைத்தும், சி.ஜி.எப்., நிதியின் கீழ், ஆந்திர அறநிலையத்துறைக்கு தன்னுடைய வருமானத்தில், ஒன்பது சதவீதத்தை அளிக்க வேண்டும் என, அறநிலையத்துறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கும் பொருந்தும். தவிர, தேவஸ்தானம், அறக்கட்டளை நிர்வாக நிதியத்தின் கீழும், அறநிலையத்துறைக்கு நிதி செலுத்த வேண்டி உள்ளது. ஆனால், தேவஸ்தானம், ஏழுமலையான் உண்டியல் வருமானத்தை கணக்கு காட்டாமல், தேவஸ்தானத்தின் கீழ் உள்ள மற்ற கோவில்களின் வருமானத்தை மட்டும் கணக்கில் காட்டி, ஒன்பது சதவீத நிதியை, சி.ஜி.எப்.,பில் செலுத்தி வந்தது. அதனால், 2012ம் ஆண்டு வரை, தேவஸ்தானம், 225 கோடி ரூபாயை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக, ஆந்திர அறநிலைத்துறை கணக்கு காட்டியது. இதுகுறித்து, 2012ம் ஆண்டு, தேவஸ்தான அறங்காவலர் குழு கூடி, ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி, ஆண்டிற்கு தேவஸ்தான வருமானத்திலிருந்து, சி.ஜி.எப்., மற்றும் ஈ.ஏ.எப்., நிதிகளின் கீழ், 25 கோடி ரூபாய் செலுத்துவதாக ஒப்புக் கொண்டது.
ஆனால், 2012 - 13 நிதியாண்டு, நான்கு கோடி ரூபாய் செலுத்திய தேவஸ்தானம் அதற்கு பின் வந்த ஆண்டுகளில், 1.25 கோடி ரூபாய் மட்டுமே அறநிலையத்துறைக்கு செலுத்தி வருகிறது. இதுகுறித்து ஆந்திர அறநிலையத்துறை அதிகாரிகள், பலமுறை, தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதினர். ஆனால், தேவஸ்தானம் பதிலளிக்கவில்லை. அதன்படி, 2012ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு வரை, ஆந்திர அரசிற்கு, 70 கோடி ரூபாய் செலுத்தாமல், தேவஸ்தானம் நிலுவையில் வைத்துள்ளது. எனவே, ஆந்திர அரசு தலையிட்டு, நிலுவை தொகையை வழங்க, தேவஸ்தானத்திற்கு உத்தரவிட வேண்டும், என, ஆந்திர அரசுக்கு, அறநிலையத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.