பதிவு செய்த நாள்
11
நவ
2010
04:11
தொட்டிலில் படுத்திருந்த சத்யாவின் தலையில் வட்ட வடிவ ஒளி தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. பார்க்க கண் கூச வைத்த அந்த ஒளி அனலாய் தகிக்குமோ என ஈஸ்வராம்பா நினைத்தார். ஆனால், அந்த ஒளி குளுகுளுவென்று இருந்தது. ஈஸ்வராம்பா அதைப் பார்த்தபடியே தன்னை மறந்து அமர்ந்து விட்டார். அந்த ஒளி நீண்ட நேரமாய் அப்படியே இருந்தது. பிறகு படிப்படியாக குறைந்து ஒரு கீற்று மட்டும் தெரிந்தது. இந்த நேரத்தில் மாமியார் லட்சுமம்மா உள்ளே வந்தார். அடித்து வைத்த சிலை அசையாமல் உட்கார்ந்திருந்த மருமகளை எழுப்பி, என்னம்மா நடந்தது? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்? என்றார். நடந்த விபரத்தைச் சொன்னார் ஈஸ்வராம்பா. அதிசயப்பட்டார் லட்சுமம்மா. நான் சொல்லவில்லையா? உனக்கு பிறந்திருப்பது சாதாரண குழந்தை அல்ல. அவன் தெய்வ மகன். இந்த உலகத்தை காக்க வந்த கடவுள் அவன். இருந்தாலும் இங்கே நடந்ததை வெளியே சொல்லாதே. மற்றவர்கள் இதைக் கேட்டால் நம்பாமல் எள்ளி நகையாடுவார்கள். நமக்குள்ளேயே இதை ரகசியமாக வைத்துக் கொள்வோம், என்றார். சிறிது நேரத்தில் ஒளி மறைந்து விட்டது. அதன் பிறகே குழந்தைய தூக்கினார் ஈஸ்வராம்பா. சத்யா கிடுகிடுவென வளர்ந்தான். அவனது பொழுது பக்கத்து வீட்டு சுப்பம்மா வீட்டில் தான் கழியும். இவன் அங்கு போனால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஏன் இவன் அங்கு போனால் சந்தோஷமாக இருக்கிறான். வீட்டுக்கு வந்தால் உம்மென ஆகி விடுகிறானே! ஈஸ்வராம்பாவுக்கு இதுவும் கவலையைத் தந்தது. இதற்கான காரணத்தை கண்டறிய முற்பட்டார். ஒருநாள் வீட்டில் கோழிக்கறி சமைக்க ஏற்பாடாயிற்று. பூஜை, புனஸ்காரம் என செய்தாலும், சத்யாவின் குடும்பத்தினர் அசைவமும் சாப்பிடுவர். அன்று சத்யாவைக் காணவில்லை. அவனைத் தேடிப் பார்த்தார்கள். வீட்டின் பின்புறத்தில் சத்யா கோழியை மார்போடு அணைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
இன்னும் சிறிது நேரத்தில், உன் உயிர் பறிபோய் விடுமே! உன்னைக்காப்பாற்ற என்னால் இயல்வில்லையே, என்று கண்ணீர் ததும்ப கோழியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் சத்யா. அவனது செய்கையை புரிந்து கொண்ட குடும்பத்தினர் கோழியை வெட்டாமல் விட்டு விட்டனர். அந்தக் குழந்தை சுப்பம்மாவை விரும்பியதற்கு காரணமே அந்த வீட்டில் இருந்த ஜீவகாருண்யம் தான். சுப்பம்மா பிராமணர் என்பதால், அங்கு மாமிசம் சமைப்பதில்லை. சத்யா சைவமாகவே இருக்க விரும்பினான். அவன் அசைவம் சமைத்த பாத்திரங்கள் அருகே கூட போக மாட்டான். சத்யாவின் செய்கைகள் எல்லாமே வித்தியாசம் தான். அவன் சக நண்பர்களுடன் ஆற்றுக்கு போவான். விளையாட்டும் ஆட்டமும் பாட்டமுமாக இருப்பான். ஆனால் வீட்டுக்கு வந்தால் மவுன ராகம் இசைத்து விடுவான். ஈஸ்வராம்பா பல பண்டங்களை அவனுக்கு செய்து கொடுப்பார். வேண்டாம் எனச் சொல்லி விடுவான். ஈஸ்வராம்பாவின் மனம் படாத பாடு படும். அவனது வீட்டுக்கு அனந்தப்பூரில் இருந்து வியாபாரிகள் துணிமணிகள் கொண்டு வருவார்கள். பார்க்க அழகாக இருக்கும் அந்தத் துணிகளை சத்யா கண்ணெடுத்தும் பார்க்க மாட்டான். உனக்கு பிடித்ததை எடு தாயே, என அம்மாவிடம் சொல்லி விடுவான். வீட்டிலுள்ள மற்ற குழந்தைகள் எல்லாம் விரும்பி எடுக்கும் விலை உயர்ந்த ஆடைகள் பற்றி சத்யா கவலைப்பட்டதில்லை. அவனுக்கு எளிய உடைகளே பிடித்திருந்தன. இதெல்லாம் ஈஸ்வராம்பாவுக்கு பெரும் வருத்தம் தந்தன. மகனை மற்ற குழந்தைகள் போல் நல்ல உடைகள் அணிவித்து, சீரும் சிறப்புமாக வளர்க்க வேண்டும் என்று எல்லாத் தாய்மார்களும் விரும்புவதைத் தான் ஈஸ்வராம்பாவும் விரும்பினார். ஆனால் சத்யா எளிமையே வடிவாக இருந்தான். பஜனைப் பாடல்களைப் பாடுவான். திருநீறை அள்ளி அள்ளி பூசுவான்.
ஒருமுறை ராமலீலா திருவிழா அன்று வீட்டில் சத்யா காணாமல் போனான். வீட்டில் உள்ளவர்கள் அவனை தேடி அலைந்தனர். அப்போது சிலர் ஒரு வண்டியில் ராமனின் படத்தை அலங்கரித்து எடுத்து வந்தனர். சத்யா அந்த படத்தின் கீழே அமர்ந்திருந்தான். இதைப் பார்த்த ஈஸ்வராம்பா, இவனை சப்பரத்தில் ஏற எப்படி பூஜாரி அனுமதித்தார், என ஆச்சரியப்பட்டார். இளமையிலேயே அவனுக்கு இரக்க சுபாவம் அதிகமாக இருந்தது. ஊரில் இருக்கும் பிச்சைக்காரர்கள் எல்லாம் இவனது இரக்க சுபாவத்தை பயன்படுத்தி, வீட்டிற்கே வர ஆரம்பித்தார்கள். சில சமயங்களில் சத்யாவும் இவர்களைத் தேடிப்போய் வீட்டுக்கு கூட்டி வந்து விடுவான். ஒருநாள் இவனது சாப்பாட்டையே ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து விட்டான். அம்மா கண்டித்தார். நீ சாப்பிட்டாயா? என்றார். ஆமாம் அம்மா! பொய் சொல்லாதே சத்யா! நீ பிச்சைக்காரனுக்கு கொடுப்பதை நான் பார்த்தேனே. அம்மா! நானும் சாப்பிட்டேனே! தாத்தா எனக்கு சாப்பாடு தந்தாரே அம்மாவுக்கு சந்தேகம். தாத்தாவிடம் கேட்டார். நான் சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லையே, என்றார் தாத்தா. அம்மாவுக்கு கோபமே வந்து விட்டது. சத்யா திரும்பத்திரும்ப பொய் சொல்லாதே, என்று கோபமாக கேட்டதும், தன் கையை அம்மா முகத்தில் வைத்து, பாருங்கள்! நெய் வாசம் அடிக்கிறது, என்றான் சத்யா. அம்மாவுக்கு ஆச்சரியமாகி விட்டது. இவனுக்கு நெய்ச்சோறு கொடுத்தது யார்?. வயிறு நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வுடன் இருக்கிறானே, என ஆச்சரியப்பட்டார்.