Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை தீபம் ஏற்றும் முறைகள்
முதல் பக்கம் » கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் கொண்டாடும் பிற கோயில்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 டிச
2011
03:12

அம்மனுக்கு ஆராட்டு!

திருவண்ணாமலை-வேலூர் ரோட்டில் சந்தவாசல் என்ற இடத்திலிருந்து படவேடு செல்லும் வழியில் 1 கி.மீ. தொலைவில் கங்காதேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குப் பின்புறம் ராஜகம்பீரமலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இந்த மலையிலும், அடுத்து திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தாராம். மிதிமலை என்று அழைக்கப்படும் இந்த மலையில் சிவன் பாதச்சுவடு காணப்படுகிறது. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கைசிக கார்த்திகையன்று இந்த மலையில் விஷ்ணு தீபம் எனப்படும் தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். மீனாட்சியம்மன், கேரளா குமாரநல்லூரில் பகவதி எனும் திருநாமம் தாங்கி கோயில் கொண்டுள்ளாள். கோட்டயத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலில், கார்த்திகையில் 10 நாள் விழா நடக்கிறது. ஒன்பதாம் நாளான கார்த்திகையன்று ஆராட்டு பூஜை நடக்கிறது. அன்று 36 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரமாண்டமான அன்னதானம் கோயிலில் நடைபெறும். பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் ஊர்வலமாக அழைத்துவரப்படும்.

திருச்செந்தூரில் திருக்கார்த்திகை தினத்தன்று ஜெயந்திநாதர் சண்முக விலாசத்தில் எழுந்தருள்வார். அன்று கடற்கரையில் பனை ஓலையால் சொக்கப் பனை கொளுத்துவார்கள். பின் சாம்பலைக் கரைத்து ஜெயந்திநாதருக்கு பொட்டு வைப்பார்கள். சொக்கப் பனை ஓலைச் சாம்பல் உழவர்களுக்கு கொடுக்கப்படும். விளைநிலங்களில் இந்த சாம்பலைத் தூவினால் நன்றாகப் பயிர் வளரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

வந்தாச்சு யோகம்!

வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால், அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்து, வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சம் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்ட எலிக்கே ராஜயோகம் கிடைத்தது என்றால், மானிட ஜென்மம் எடுத்த நாம், கோயில்களில் விளக்கேற்றி வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலனுக்கு அளவே இருக்காது.

தீபஒளியில் ஜொலிக்கும் சிவன்மலை!

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சிவன்மலையில் அமைந்துள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். இங்கே, வள்ளி-தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார் முருகப் பெருமான். ஆஞ்சநேயர், இந்தத் தலத்துக்கு வந்து முருகக் கடவுளை வணங்கிச் சென்றதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். சிவவாக்கியர் எனும் சித்தர், இந்த மலையில் நெடுங்காலம் தங்கியிருந்து கடும் தவம் செய்தார் என்பதால், இந்த மலை சிவன்மலை என அழைக்கப்படுகிறது. தந்தையின் பெயரில் மலை அழைக்கப்பட்டாலும்... இங்கு மலை மீது குமரனே கோயில் கொண்டுள்ளார்.பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி என விழாக்கள் பலவும் விமரிசையாக நடைபெறும் இந்தக் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவன் மலையே விளக்குகளால் ஜொலிப்பது, கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
கார்த்திகைக்கு முதல் நாள் பரணி தீபமும், 2-ஆம் நாளான திருக்கார்த்திகை நாளில் கார்த்திகை தீபமும், 3-ஆம் நாளில் ரோகிணி தீபமும் ஏற்றி, முருகக்கடவுளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். கார்த்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வணங்கி, வழிபட்டால் சகல விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது ஐதீகம்! மேலும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில், கார்த்திகேயக் கடவுளை வணங்கி வழிபட்டால், திருமண பாக்கியம் கிடைக்கும்; அழகன் முருகனைப் ÷ளை பாக்கியம் இல்லையே எனக் கலங்குவோர், ஆறு நெய் விளக்குகளேற்றி, ஆறு வகைப் பழங்களால் நைவேத்தியம் செய்து, ஆறு வகைப் பூக்களால் அர்ச்சித்து, ஆறு வாரங்கள் தொடர்ந்து ஆறுமுகனை வழிபட்டு வந்தால், விரைவில் திருமணம் நடந்தேறும்; மனம் போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவார்கள்.

அங்கே அண்ணாமலை தீபம்! இங்கே சுவாமிமலை தீபம்!

ஆறுபடை வீடுகளில், முருகப்பெருமான் ஞான குருவாகத் திகழும் திருத்தலம் சுவாமிமலை. பிரணவ மந்திரத்தை எடுத்துரைத்த ஒப்பற்ற திருவிடம் இது!
சோழ தேசத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெறும் முக்கியமான - முதன்மையான தலம், சுவாமிமலை எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். தந்தையார் அருணாசலேஸ்வரராகக் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலைக்கு நிகராக, இங்கே மைந்தனின் ஆலயத்தில் விமரிசையாக நடந்தேறும் திருவிழா, எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். கோயில் நகரமாம் கும்பகோணத்தின் மிக அற்புதமான இந்தத் தலத்தை, திருமுருகாற்றுப்படையில் திருவேரகம் எனப் போற்றிப் பாடுகிறார் நக்கீரர். சுவாமிநாத ஸ்வாமியை வணங்கினால், புத்தியில் தெளிவும் ஞானமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்! அதுமட்டுமா! வஜ்ர தீர்த்தம், குமாரதாரை தீர்த்தம், சரவண தீர்த்தம், நேத்திர புஷ்கரணி, பிரம்ம தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் கொண்ட அற்புதமான திருத்தலம் சுவாமிமலை எனப் போற்றுகின்றனர் ஞானகுருமார்கள்.

சுகப்பிரம்ம மகரிஷி, இங்கேதான் முருகக் கடவுளை நினைத்து தவம் செய்து, வீடுபேறு பெற்றார்; இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிநாத ஸ்வாமியை மனமுருக வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லையில் இருந்து தப்பலாம்; தீர்த்தத்தில் நீராடித் தொழுதால், ஏழேழு பிறவிகளில் செய்த பாவங்களும் விலகும் என்கிறது ஸ்தல புராணம். இத்தனை பெருமைகள் கொண்ட சோழ தேச கோயிலில், வருடத்துக்கு மூன்று முறை பிரம்மோத்ஸவ விழாக்கள் நடைபெறுகின்றன. இங்கே, திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவின்போது, பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனைத் தரிசிக்க வருவார்கள். கார்த்திகைப் பெண்களால் வளர்ந்து, கார்த்திகேயன் எனும் திருநாமமும் பெற்ற சுவாமிநாத ஸ்வாமியை கார்த்திகை தீபத் திருநாளில் வணங்குங்கள்.

சிவ ஆலயங்களில் கார்த்திகை

திருவாசகத்தை அருளிய மாணிக்க வாசகருக்கு ஈசனே குருவாக வந்து குருந்த மரத்தடியில் உபதேசம் செய்த தலம், திருப்பெருந்துறை. இக்கோயிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை வகை வகையாக அமைத்துள்ளனர். 27 நட்சத்திரங்கள், 3 மூர்த்திகள், 36 தத்துவங்கள், 5 கலைகள், 51 வர்ணங்கள், 87 உலகங்கள், 11 மந்திரங்கள் என ஒவ்வொன்றையும் விளக்கும் வகையில் இவ்விளக்குகள் அமையப் பெற்றுள்ளன. 27 நட்சத்திர தீபங்களை கருவறையில் ஏற்றியுள்ளனர். உலகைப் படைத்து, காத்து, அழித்து வழிநடத்தும் மும்மூர்த்திகளைக் குறிக்க 3 தீபங்களை ஏற்றி கருவறையில் மஞ்சள், பச்சை, சிவப்பு நிற கண்ணாடிப் பெட்டியில் வைத்துள்ளனர். 36 தத்துவங்களைக் குறிப்பதாக 36 தீபங்களை தீப மாலையாக தேவ சபையில் ஏற்றி வைத்துள்ளனர். 5 வகை கலைகளைக் குறிக்க 5 தீபங்களை கருவறையில் ஒன்றின் கீழ் ஒன்றாக ஏற்றியுள்ளனர். 51 எழுத்துகளைக் கொண்டது வர்ணம். இதைக் குறிக்க 51 தீபங்களை கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.

உலகங்கள் 87. இதைக் குறிப்பதற்கு கனக சபையில் குதிரைச் சாமிக்கு அருகே 87 தீபங்களை ஏற்றி வைத்துள்ளனர். மந்திரங்களைக் குறிக்க 11 விளக்குகளை நடனசபையில் ஏற்றி வைத்துள்ளனர். இப்படி தேவர்களை திருவிளக்குகளாக அமைத்து தீபமாக ஏற்றி வைத்துள்ளனர். இப்படிப்பட்ட அதிசய அமைப்பு தீபங்களை ஆவுடையார் கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும். ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சத் தீபவிழா. மயிலாப்பூரில் ஆண்டுதோறும் இது நடக்கும். திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவர். அதிலும் இவ்வாலய சங்கு தீர்த்தத்தில் 12 வருடத்துக்கு ஒருமுறை தோன்றிய வலம்புரி சங்குகளைக் குவியலாகச் சேமித்து வைத்துள்ளனர். அச்சங்குகளால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து லட்சதீப விழா நடத்துவர். காஞ்சியில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில், ஏற்றிய மாவிளக்கை தலையில் வைத்துக்கொண்டு ஆலய வலம் வந்து வழிபட்டு ஈசன் அருளை பெறுவர். விருட்ச வடிவம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தால் ஒரு மரமே தீப ஒளியுடன் பிரகாசிப்பது போல இருக்கும். இவ்விளக்குகளை குருவாயூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆலயங்களில் காணலாம்.

திருமழிசை குளிர் நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோம வாரத்தில் காலையில் 108 சங்காபிஷேகம் செய்வர். மாலையில் லட்ச தீப விழா நடத்துவர். பின் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். குமரி மாவட்டத்தில், கார்த்திகை தீபத்தன்று பெண்கள் வீட்டு முற்றத்தில் பூக்கள் நிரப்பிய தாம்பளத்தின் மத்தியில் குத்துவிளக்கேற்றி வைப்பர். அதனருகில் ஒரு பெரிய அகல் விளக்கின் எண்ணெய், திரிகளை நிரப்பி எரிய விடுவர். தினமும் வீட்டில் சுவாமி அறையில் ஏற்றும் தீபத்தில் பாக்கி உள்ள எண்ணெய், திரிகளை சேமித்து வைத்து அதனால் இதை எரிய விடுவர். இதனை பரணி தீபம் என்பர். இது குமரி மாவட்டப் பழக்கமாகும். வாஞ்சியத்தில் உள்ள முனிதீர்த்தம் என்ற குப்தகங்கையில் கங்காதேவி 999 பங்கு தன் சக்திகளுடன் ரகசியமாக வசிக்கிறாள். காசியில் ஒரு பங்கு சக்தியுடன் தான் வாசம் செய்கிறாள். எனவே காசியைவிட வாஞ்சியம் அதிக மகத்துவம் பெற்ற தலம். இங்கு கார்த்திகை ஞாயிறுகளில் நீராடி ஈசனை வழிபட்டால் பஞ்சமாபாதகம் விலகும். அன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் ஈசனும், தேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து குப்தகங்கை கிழக்குக் கரையில் ஆசி வழங்குவார்கள். இதை தரிசிப்பது புண்ணியம். குடந்தை நன்னிலம் சாலையில் ஒரு கி.மீ, தொலைவில் இத்தலம் உள்ளது.

திருப்பதியில் நடைபெறும் கார்த்திகை தீபம்

விஷ்ணு தலங்களில் மிகவும் புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் கார்த்திகை தீபத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். திருக்கார்த்திகைத் தீபத்தன்று பெருமாள் வீதியுலா வருவார். அதன்பின் திருப்பு மண்டபம் என்ற இடத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அடுத்து கோயிலுக்கு எதிரே ஆலய நுழைவாயில் அருகே நடைபெறும் சொக்கப்பனைக் கொளுத்தும் நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பார். பிறகு ஆலயம் செல்வார். அப்போது பக்தர்களுக்கு லட்டும், கார்த்திகைப் பொரியும் பிரசாதமாகத் தருவார்கள்.

கேரளாவில் கார்த்திகை

கேரள மாநிலம் பாலக்காடு நகரத்தின் ஒரு பகுதி கல்பாத்தி. காசியில் பாதி கல்பாத்தி என்பர். காரணம் காசியில் உள்ளது போல இங்கும் காசி விஸ்வநாதர் ஆலயமும், வற்றாத ஜீவநதியும் உள்ளது. காசி ஆலயத்தில் செய்யும் ஆறுகால பூஜையை இங்கேயும் செய்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகச் சிற்பிகளால் கவினுற செய்து கொடுக்கப்பட்ட தேர் இங்கு உள்ளது. இவ்வாலயத்தின் பெரிய விழா இந்த தேர்த்திருவிழாதான். ஐப்பசி மாதத்து கடைசி மூன்று நாட்கள் இந்தத் தேர்த் திருவிழா நடைபெறும். இந்நாட்களில் சுற்றியுள்ள 18 கிராமங்களையும் தேர் சுற்றிவந்து கார்த்திகை மாத முதல் நாள் நிலைக்கு வரும். இவ்விழாவில் தமிழக பக்தர்களும் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். பிரம்மன் சரஸ்வதியைப் பிரிந்திருந்த காலத்தில் காஞ்சியில் யாகம் ஒன்று நடத்தினார். தன்னை விட்டு விட்டு பிரமன் யாகம் நடத்துவதால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை அழிக்க வேகவதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிவந்தார். திருமால் பெரிய ஒளிப் பிழம்பாக மாறி யாகத்தைத் தடுத்தார்.

பின் யாகத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமலிருக்க சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். திருமாலுக்கு தீபப் பிரகாசர் என்றும், சிவனுக்கு விளக்கொளி நாதர் என்றும் பெயர். தீபேஸ்வர் என்றும் சிவனை அழைப்பர். இங்கு கார்த்திகை தீபத்தன்று ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இப்படித்தான் தீபப் பிரகாசர் தோன்றினார். அத்துடன் தீபேஸ்வரரையும் பிரதிஷ்டை செய்தார். காசியில் மணிகர்ணிகா துறை அருகே மணிகர்ணிகேஸ்வரர் ஆலயத்தில் தீபப் பிரகாச லிங்கம் உள்ளது. இதை ஜோதி தீபேஸ்வரர் என்பர். கார்த்திகை தீபத்தன்று தீபதானம் செய்து இச்சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா வகையான சிறப்புகளையும் பெறலாம். தேவலோக மங்கையர்களான அப்சரப் பெண்கள் இங்கு வந்து தீபமேற்றி வழிபட்டு பெரும் பேறு பெற்றுள்ளனர்.

 
மேலும் கார்த்திகை தீபம் »
temple news
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி ... மேலும்
 
temple news
கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் ... மேலும்
 
temple news
பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். ... மேலும்
 
temple news
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar