பதிவு செய்த நாள்
16
செப்
2017
01:09
ஈரோடு: கிருஷ்ண ஜெயந்தி விழாவில், ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலர் பிரகார உலா சென்றார். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா, நேற்று முன்தினம் இரவு, கோலாகலமாக நடந்தது. ஆவணி மாத பவுர்ணமியை, அடுத்த எட்டாம் நாள், தேய்பிறை அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் அவதரித்தார். அதனடிப்படையில், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், கடந்த, 13ல் விழா தொடங்கியது. அன்றைய தினம், திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. மறுநாள் கோபாலர் திருப்பள்ளி எழுச்சி, கிருஷ்ண லீலை விளையாட்டுகளில் ஒன்றான, வழுக்குமரம் ஏறும் நிகழ்வு நடந்தது. அதைத் தொடர்ந்து, ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, சப்பரத்தில் பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.