பதிவு செய்த நாள்
16
செப்
2017
01:09
கொல்லிமலை: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆறு நாட்களாக பின், நேற்று அனுமதி அளிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத்தளமாக விளங்கும், கொல்லிமலையில், ஏராளமான அபூர்வ மூலிகை செடிகள் உள்ளன. இங்கு, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் கொல்லிப்பாவை என்று அழைக்கப்படும், எட்டுக்கை அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் கொண்ட கொல்லிமலைக்கு, விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் மட்டும் அல்லாமல், வெளியூரை சேர்ந்தவர்கள், சுற்றுலாப்பயணிகள் என, ஏராளமானோர் வந்து செல்வர்.கடந்த, சில நாட்களாக கொல்லிமலையில் கனமழை பெய்ததால், 300 அடி உயரத்தில் உள்ள அருவியில் இருந்து மழைநீர் வெள்ளமாக கொட்டியது. அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு, தடைவிதிக்கப்பட்டது. தற்போது, தண்ணீரின் வேகம் குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல, ஆறு நாட்களுக்கு பின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள், நேற்று அருவிக்கு சென்றனர்.