கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கோயிலில் அனுமதிக்கலாம் : கேரள தேவசம்போர்டு அமைச்சர் பேட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2017 01:09
நாகர்கோவில்: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கோயிலில் அனுமதிக்கலாம் என்ற கேரள அரசின் நிலைப்பாட்டை திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். பத்மனாபபுரத்தில் அவர் கூறியதாவது: சபரிமலை மண்டல மகரவிளக்கு சீசன் நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செப்.20-ம் தேதி தேவசம்போர்டு ஊழியர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும். அக்.17-ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் முதல்வர் தலைமையில் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அன்று சுற்றுச்சூழல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை கட்டடம் திறந்து வைக்கப்படும். சபரிமலை செல்லும் ரோடுகள் அனைத்தும் 175 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. சீசன் தொடங்குவதற்குள் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்படும். கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாசை திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இடது முன்னணி அரசின் நிலைப்பாடு. இதை பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன் என்றார். இதற்கிடையில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ., எம்.பி. சுரேஷ்கோபி, ”ஜேசுதாசை ஸ்ரீபத்மனாபசுவாமி கோயிலில் அனுமதிக்க வேண்டும்,” என்றார்.