கோல்கட்டாவில், காஞ்சி மகாபெரியவரின் பரம பக்தர் இருந்தார். அவர் வீட்டில் இருந்த மாதுளை மரத்தின் பழங்கள் பெரிதாகவும், நல்ல ருசி உள்ளதாகவும் இருக்கும். அந்த பழங்களை, பெரியவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என விரும்பினார் பக்தர்.
அப்போது அவர் வீட்டிற்கு,சென்னையில்இருந்து வந்த உறவினர் மூலம் பழங்களைப் பெரியவருக்கு அனுப்பினார். உறவினரின் உள்ளத்தில் ஒரு சின்ன சபலம். பக்தர் தந்த 25 பழங்களில், ஐந்தை தன் வீட்டில் வைத்துக் கொண்டு, மீதி பழங்களுடன் காஞ்சிபுரம் சென்றார். மடத்திற்குச் சென்று, பழக்கூடையை பெரியவர் முன் சமர்ப்பித்தார். கூடையைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்த பெரியவர், கொண்டு வந்தவரை உற்று நோக்கினார். வந்தவர், ஏன் தாம் உற்று நோக்கப்படுகிறோம் என்றறியாது குழம்பினார். சுவாமிகள் கைதட்டி மேலாளரை அழைத்தார். கூடையில் எத்தனை பழங்கள் இருக்கின்றன என எண்ணிப் பார்க்குமாறு பணித்தார்.
இருபது பழங்கள்! என்று பதில் சொன்னார் மேலாளர். நல்லது. இந்தப் பழங்களைக் கொடுத்தனுப்பிய கோல்கட்டா அன்பரின் முகவரிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுது. அதில் மறக்காமல் இருபது பழங்கள் கிடைத்தன என்று குறிப்பிட்டு எழுது, என்றார். பிறகு, கொண்டு வந்தவரையே மீண்டும் உற்றுப் பார்த்தார். பின் அந்தக் கூடையிலிருந்தே ஒரு மாதுளம் பழத்தை எடுத்து அவருக்கு பிரசாதமாக வழங்கினார் அதைப் பெற்றுக் கொள்ளும் போது பழங்களைக் கொண்டு வந்தவரின் கைகள் வெட வெடத்தன. பழத்தோடு நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து சுவாமிகளை வணங்கினார். அவரது விழிகளில் ஏன் கண்ணீர் தழும்பியது என மேலாளருக்குப் புரியவில்லை. திருப்பூர் கிருஷ்ணன்