பதிவு செய்த நாள்
21
செப்
2017
01:09
திருப்பூர் : “சிறைபிடிக்கப்பட்ட தன்னை, ராமனே வந்து மீட்டால் தான், அவரது பெருமை உலகுக்குத் தெரிய வரும் என்று கருதி, ராமனின் பெருமையை ஓங்கச் செய்தவர் சீதை,” என, சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். ‘சுந்தர காண்டம்’ என்ற தலைப்பில் தொடர் பக்தி சொற்பொழிவு திருப்பூர் காயத்ரி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பேசியதாவது: ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட சீதை, அசோக வனத்தில் இருந்த போது, ராமன் வந்து தன்னை மீட்டுச் செல்வார் என்று காத்திருந்தார். அங்கு வந்த சேர்ந்த அனுமனோ, ‘தாயே என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள். அயோத்தியில், ராமரிடம் உங்களை கொண்டு சென்று சேர்ப்பேன்,’ என்றார். ஆனால், பல்வேறு காரணங்கள் கூறி, அதற்கு சீதை மறுத்துவிட்டார். அனுமனால், சீதை கூறிய காரணங்களை ஏற்க முடியவில்லை.
சீதை, ‘என்னை, என் கணவர் ராமரே வந்து, அந்த ராட்சத கூட்டத்தை அழித்து, மீட்டு செல்ல வேண்டும். அப்போது தான் ராமரின் பெருமையை, இந்த உலகம் அறியும்,’ என்றார். தன்னை கண்டு வந்த சேதியை ராமரிடம் சேர்க்கும் போது, தனது நெற்றிச்சுட்டி, சூடாமணி ஆகியவற்றை, அவரிடம் சேர்ப்பிக்குமாறு கூறினார். மேலும், காட்டிலும், நாட்டிலும் வசித்த போது, ராமர்-சீதை தவிர வேறு யாருக்கும் தெரியாத, இரு சம்பவங்களை விளக்கி, அதை கூறினால் ராமர் அறிந்து கொள்வார் என்று, சீதை தெரிவித்தார். தனது சேதியாக, ராமனுக்கு, 30 நாட்களில் அசோக வனத்தில் சிறை பிடிக்கப்பட்ட தன்னை மீட்க வேண்டும் என்ற சேதியும்; லட்சுமணனுக்கு எப்போதும் அண்ணன் ராமனுக்கு துணை யாக இருக்க வேண்டும் என்றும்; சுக்ரீவனுக்கு எடுத்த காரியத்தை செவ்வென செய்து முடிக்க வேண்டும் எனவும் கூறுமாறு தெரிவித்தார்.
ஒரு சம்பவத்தில், வீபிடணன் ராமரின் பாதங்களைப் பற்றியதால் அவனுக்கு அருள் வழங்கினார். அதே போல், காகத்தின் உருவில் வந்து சீதையை துன்புறுத்திய இந்திரன் மகன் ஜெயந்தன், ராமரின் பாதத்தை அண்டிய போது, அவனுக்கும் அருள் செய்தார். ஆனால் அந்த இருவருக்கும் ராமரின் பாதத்தை தொட்டு வணங்கும் பாக்கியத்தை ஏற்படுத்தியவர், சீதை தான். தன் பாதங்களை சேர்ந்தவர்களுக்கு அருள் பாலிப்பது ராமரின் குணம். ஆனால், தனக்கு யார் என்றே தெரியாத அவர் களையும், ராமரின் பாத த்தை சேரும்படி பணித்து, அருள் செய்தவர் சீதை. இவ்வாறு, அவர் பேசினார்.