பதிவு செய்த நாள்
05
டிச
2011
10:12
சபரிமலை : சந்திர கிரகணத்தை ஒட்டி, வரும் 10ம் தேதி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நான்கு மணிநேரம் அடைக்கப்படும். கேரளா சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது, மண்டல பூஜை உற்சவம் நடந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 10ம் தேதி மாலை, சந்திர கிரகணம் நிகழ உள்ளதையொட்டி, கோவில் நடை, அன்று மாலை 6.15 மணிக்கு, தீபாராதனைக்குப் பின் அடைக்கப்படும்.
தொடர்ந்து, நான்கு மணி நேரம் அடைக்கப்படும் நடை, இரவு 10.15 மணிக்கு, மீண்டும் திறக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, கோவில் சுத்தப்படுத்தப்படும். அதன் பின், வழக்கமான பூஜைகள் தொடரும். சந்திர கிரகணத்தின்போது, இரண்டு மணி நேரம் மட்டுமே நடை அடைக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, உற்சவ காலம் என்பதால், தினமும் அதிகாலை மூன்று மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை, பிற்பகல் ஒரு மணிக்கு அடைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். இதை அடுத்து, இரவு 11.45 மணிக்கு நடை அடைக்கப்படும்.