பதிவு செய்த நாள்
22
செப்
2017
01:09
கிருஷ்ணகிரி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு மொம்மைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவின் போது, ஒன்பது நாட்கள் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து, தினமும் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. கிருஷ்ணகிரி காந்தி நகரில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில், நேற்று அதிகாலை கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகளை வைத்து பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், கிருஷ்ணகிரியில் ஏராளமான இந்துக்கள் தங்கள் வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து, பூஜை செய்து குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்கினர். தர்மபுரியில் உள்ள கோட்டை காமாட்சி அம்மன் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் மற்றும் தர்மபுரி நகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில், நவராத்திரியை முன்னிட்டு, கொலு வைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து அம்மனை வழிப்பட்டனர்.