பதிவு செய்த நாள்
25
செப்
2017
01:09
புன்செய்புளியம்பட்டி: கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அக்.,1ல் அம்பு சேர்வை விழா நடக்கிறது. புன்செய்புளியம்பட்டி, கோவில் புதூரில், கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், 600 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு, அம்புசேர்வை திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, செப்., 30ல், நள்ளிரவு, 1:00 மணிக்கு, கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, குதிரை, கருடவாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சப்பரம் ஆகிய நான்கு வாகனங்களில் சுவாமி அழைப்புடன், அம்புசேர்வை விழா துவங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வரும், நான்கு சுவாமி வாகனங்களும், அக்.,1ல் காலை, 6:00 மணிக்கு, பிளேக் மாரியம்மன் கோவிலை வந்தடைகிறது. அங்கு, குதிரை வாகனத்தில், கரிவரதராஜ பெருமாள் எழுந்தருளி, அம்புசேர்வை நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு கவாள பூஜையும், மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு பாவாடை பூஜையும் நடக்கிறது. அன்றிரவு, 8:00 மணிக்கு சுவாமி வாகனங்கள் மீண்டும், கரிவரதராஜ பெருமாள் கோவிலை சென்றடைகிறது.