மதுரை மீனாட்சி கோயிலுக்கு போறீங்களா: குப்பையை வீசினா ரூ.50 அபராதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2017 11:09
மதுரை;மதுரை மீனாட்சி கோயிலுக்குள் குப்பை போட்டால் கோயில் நிர்வாகமும், வெளிப்புறங்களில் குப்பை போட்டால் மாநகராட்சியும் 50 ரூபாய் அபராதம் வசூலிக்கும், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் இக்கோயிலில் துாய்மையே சேவை இயக்கம் நடந்தது. கலெக்டர் மாணவர்களுடன் இணைந்து கோயிலில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: கோயில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரங்களில் 50 அடிக்கு ஒரு தொட்டி வைத்து குப்பை சேகரிக்கப்படுகிறது. துப்புரவு பணியில் ஈடுபடுவோரை மேற்பார்வையிட துாய்மை காவலர்கள் நியமிக்கப்படுவர். பக்தர்கள் குப்பைகளை தொட்டிகளில் இட வேண்டும்.
உள்பிரகாரத்தில் குப்பை கொட்டினால் கோயில் நிர்வாகம், வெளிப்பிரகாரத்தில் குப்பை கொட்டினால் மாநகராட்சி சார்பில் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குப்பை தொட்டியில் குப்பை போடாமல் வளாகத்தை அசுத்தப்படுத்துவோர் குறித்து தெரிவிப்பவர்களுக்கு கோயில் நிர்வாகம் பிரசாத லட்டு பரிசு வழங்கும். கோயிலை சுத்தமாக வைத்து கொள்ள பக்தர்கள் உதவ வேண்டும், என்றார். மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன், நகர் நல அலுவலர் சதீஷ்ராகவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.