பதிவு செய்த நாள்
26
செப்
2017
11:09
ஸ்ரீவில்லிபுத்துார்: புரட்டாசி பிரம்மோத்ஸவ ஐந்தாம் நாள் கருடசேவையை முன்னிட்டு, திருமலை திருப்பதி பெருமாள் சாற்றிக்கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் திருப்பதி கொண்டு செல்லப்பட்டது. சித்ரா பவுர்ணமியன்று மதுரை கள்ளழகர், புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவில் திருப்பதி பெருமாள் சூடிக்கொள்வதற்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இருந்து மாலை, கிளி, பரிவட்டம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி பிரம்மோத்ஸவ ஐந்தாம் நாளான நாளை நடக்கும் கருடசேவையின்போது பெருமாள் சூடி கொள்வதற்காக ஆண்டாள் சூடிக் களைந்த மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று மதியம் 3:30 மணிக்கு கோயிலில் உள்ள வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு கிளி, மாலை, பரிவட்டம் சாற்றி, பாலாஜி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் மாலை, கிளி ஆகியவை கூடையில் வைத்து மாட வீதிகளில் சுற்றி வந்து திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, வேதபிரான் அனந்தராமன் மற்றும் கோயில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராம்கோ தொழில் நிறுவனங்களின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.