பதிவு செய்த நாள்
27
செப்
2017
01:09
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் ஒரு வீட்டில், ஒரு லட்சம் பொம்மைகளுடன் பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது. அசுரர்கள் வதம் செய்யப்பட்டதை, நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கும் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை அன்று நிறைவு பெறும். இந்த நவராத்திரி விழாவில், ஒவ்வொரு இல்லத்துக்கும் தெய்வங்கள் வந்து, அருள்பாலிப்பதாக நம்பிக்கை என்பதால், கொலுவில் அனைத்து தெய்வங்களின் உருவ பொம்மைகளும் வைத்து, மக்கள் வழிபாடு நடத்துவர். கும்பகோணம் அய்யங்கார் தெருவில் வசிக்கும் மோகன் - மீனாட்சி தம்பதி, 27 ஆண்டுகளாக, தங்கள் வீட்டில் கொலு அமைத்து வருகின்றனர். இந்த ஆண்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொம்மைகளை வைத்து, வீட்டின் வரவேற்பறை, கூடம், பூஜையறை, மாடி ஆகிய இடங்களில், 700 சதுர அடி பரப்பளவில் கொலு அமைத்துள்ளனர்.
மோகன் - மீனாட்சி தம்பதி கூறியதாவது: ஆண்டுதோறும், கும்ப கோணம் கருப்பூரில் பொம்மைகளை வாங்கி விடுவோம். வெளியூர் சென்றால், அங்கும் பொம்மைகளை வாங்கி வருவது வழக்கம். இந்தாண்டு கொலுவில், 151 வகையான விநாயகர், 108 சிவலிங்கம், திருப்பதி மலை என, 2 அங்குலம் முதல், 4 அடி வரை, கொலு பொம்மைகள் அமைத்து உள்ளோம். இந்த கொலுவை அமைக்க, நான்கு நாட்கள் ஆனது. தினமும் அருகில் உள்ள வர்கள், வந்து பார்த்து செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.