பதிவு செய்த நாள்
30
செப்
2017
12:09
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், 3,000 ஆண்டுகள் பழமையான புதிர் திட்டைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை ஆய்வு செய்தால், பழங்கால தமிழர்களின் வரலாற்று சான்றுகள் கிடைக்கும் என, தொல்லியல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள, வில்வன்னி ஆற்றுப்படுகையில், 3,000 ஆண்டு பழமையான புதிர் திட்டையை, புதுக்கோட்டை வரலாற்று ஆய்வு நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைவர், மணிகண்டன் கூறியதாவது:வில்வன்னி ஆற்றுப்படுகை, அம்பலத்திடல் பகுதியில், 125 ஏக்கர் பரப்பில், ஆங்காங்கே, முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றுள், எலும்புகள் உள்ளன. தாழிகளின் கழுத்து பகுதியில், எழுத்துக்களுக்கு முந்தைய குறியீடுகள் உள்ளன. சிறிய மண்பாண்டங்கள், கருப்பு - வெள்ளை மண்பாண்டங்கள் என, பல வகைகள் உள்ளன. இவை, 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்விடமாக இருக்கலாம். மேலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படும், தாய் தெய்வ வழிபாட்டு அடையாளமான புதிர் திட்டை, இங்கு காணப்படுவது, வியப்பையும், கேள்விகளையும் எழுப்புகிறது. இப்பகுதியின் வரலாற்று சுவடுகள் அழிந்து வருவதால், இப்பகுதியை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால், பழங்கால தமிழர்களின் சான்றுகள், வாழ்வியல் கூறுகளை கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் கிராம, தேவரடியார் குளம் விவசாய நிலத்தில், வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், விஜயன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது, இரு வீரர்கள் நேருக்கு நேர் நின்று, வாள், கேடயத்துடன் போர் செய்வது போன்ற நடுகல்லை கண்டு பிடித்துள்ளனர்.
வீரர்களுக்கு இடையில், வெண்கொற்ற குடை உள்ளது. அருகில், அவர்களின் மனைவியர் உள்ளனர். அதனால், இது, போரில் வீரமரணம் அடைந்த, குறுநில மன்னர்களுக்காக எடுக்கப்பட்ட, நடுகல்லாக இருக்கலாம். தேவிகாபுரத்தில் மேலும் ஆய்வு செய்தால், பல வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டம், போகலுாரில், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால கருவிகளை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டெடுத்துள்ளனர். அந்நிறுவனத்தின் தலைவர், ராஜகுரு கூறியதாவது:போகலுார் பகுதியில் செய்த கள ஆய்வில், புதிய கற்காலத்தை சேர்ந்த கற்கோடரி, தானியம் அரைக்கும் கற்கள், கவண் கல், மண்பாண்டங்கள், ஓடுகள், தக்களி, மான் கொம்பு, இரும்பு பொருட்களை, இரும்பு கழிவுகளை கண்டெடுத்தோம். இதனால், அங்கு கற்காலம் முதல், நவீன காலம் வரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. அதாவது, 5,000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி, கவண் கல், 2,000 ஆண்டு பழமையான கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பிராமி எழுத்துக்கள், குறியீடுகள், அதைத் தொடர்ந்து வந்த, இரும்பு காலத்திற்கான பொருட்கள், தக்களி உள்ளிட்டவை கிடைத்துள்ளன. அதனால், இப்பகுதியில், தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -