மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஆன்மிக அமுதம் என்ற தலைப்பில் மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம் பேசியதாவது: ஆன்மிகத்தில் வழிபாடு, அதை பற்றி அறிவது, பக்குவம் அடைவது என மூன்று நிலைகள் உள்ளன. கோயிலுக்கு போகும் போது சாம்பல் விபூதியாகவும், தண்ணீர் தீர்த்தமாகவும், சாதம் பிரசாதமாகவும் உயர்வை பெறுகிறது.ஆள்காட்டி விரல் ஆன்மா. ஆன்மாவை தாங்கியுள்ள மனிதன் பக்குவப்பட்டால் அது வளைந்து கட்டை விரலாகிய இறைவனை தொட்டு நிற்கும். மற்ற மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கும். அதில், நடுவிரல் ஆணவம், மோதிர விரல் வன்மம், சுண்டு விரல் மாயை. இவை மூன்று தான் ஆன்மாவை இறைவனிடம் வரவிடாமல் தடுக்கிறது. இந்த மூன்றிலும் இருந்து விடுபட்டால் உயிர் இறைவனோடு சங்கமிக்கும், என்றார்.