காஞ்சி மகாபெரியவரைத் தரிசிக்க, ஒரு வயோதிக தம்பதியினர் வந்தனர். முதியவர் விழிகளில் கண்ணீர்... பணி ஓய்வு பெற்றுப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. குழந்தைகள் இல்லை. வாழ்க்கை சலித்து விட்டது. சலிப்பைப் போக்க என்ன செய்வது?’’இதுவே அவர் கேள்வி. பெரியவர் அவரை ஊடுருவிப் பார்த்தார். ஓர் ஏழைப் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வையேன், வாழ்வில் பிடிப்பு ஏற்படும்!’’ சம்மதித்தார் முதியவர். அடுத்து வரிசையில் நடுத்தர வயது தம்பதி வந்தனர். அவர்களுடன் ஓர் இளம் பெண்... இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் செய்து வைக்க அவர்களிடம் வசதியில்லை. முதியவரை அழைத்த பெரியவர் இந்தப் பெண்ணிற்கே திருமணம் செய்து வை! அது உன் கடமையும் கூட!’ என்றார். முதியவரும் அவர் மனைவியும் சம்மதித்தார்கள். பெரியவர் முதியவரிடம், முதியவரின் மனைவியைக் காட்டி இவள் உன் இரண்டாம் தாரம் தானே?’ என்று வினவினார். ஆமாம், சுவாமி! முதல் மனைவி காலமாகி விட்டதால் இவளைத் திருமணம் செய்துகொண்டேன்!’ மூத்த தாரத்திடம் உனக்கு ஒரு பெண்குழந்தை உண்டே? அவள் எங்கே?’ இப்போது முதியவர், தன் மனைவியைக் கோபத்தோடு பார்த்தார். சித்தி கொடுமை தாங்காமல் சிறுவயதிலேயே காணாமல் போய்விட்டாள்!’’ என வருத்தத்தோடு சொன்னார். தேடினதெல்லாம் சரி. ஆனால் விழுப்புரத்தில் சரியாகத் தேடியிருக்க வேண்டும்!’’ என்ற பெரியவர், இப்போது நடுத்தர வயது தம்பதியிடம், இவள் உங்கள் வளர்ப்பு மகள் தானே!’’ என்றார்.
அவர்கள் ஆச்சரியத்துடன், ஆமாம் சுவாமி. விழுப்புரம் ரயில் நிலையத்தில் அழுது நின்ற இவளை நாங்கள் அழைத்து வந்து வளர்த்தோம்,’’ என்றனர். முதியவர் பக்கம் திரும்பினார் பெரியவர்.இந்தப் பெண் தான் தொலைந்துபோன உன் மகள். செய்த கொடுமைக்குப் பிராயச்சித்தமாக இவளுக்கு நீயே கல்யாணம் செய்து வை. வளர்த்தவர்களிடமிருந்து இவளைப் பிரித்து விடாதே!’’ என்றார். பின் முதியவரின் இரண்டாம் தாரத்திடம் பேசினார் பெரியவர்: உனக்குக் கடவுள் கல்யாண தினத்தில் இருந்தே ஒரு குழந்தையோடு வாழும் பேற்றைக் கொடுத்தார். அதை நீ உணரவில்லை. உன் கணவரின் மூத்த தாரத்துக் குழந்தையை, நீ கொடுமைப்படுத்தாது அன்பு செலுத்தியிருந்தால், கடவுள் உனக்கும் ஒரு குழந்தையைக் கொடுத்திருப்பார். போனதெல்லாம் போகட்டும். இனி இந்தப் பெண் மூலமாக பேரன் பேத்திகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்க்கை நடத்து!’’ என்றவர் பிரசாதம் கொடுத்தார். அனைவரும் நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் விடைபெற்றனர்.