காளையார்கோவில், மறவமங்கலத்தில் பல ஆண்டுகளாக மழைவேண்டி கிராம தேவதைகளை வழிபடும் விதமாக சேங்கை வெட்டு திருவிழாவை இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். மறவமங்கலத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சேங்கை வெட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். செப் 26ம் தேதி முத்துமாரியம்மன்கோயிலில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் கிராம தேவதைகள், காவல் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்து வந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் முத்துமாரியம்மன்கோயில் கரகம், பால்குடம் எடுத்து கிராமத்திலுள்ள அனைத்து கோயில்களுக்கும் ஊர்வலமாக எடுத்து சென்று அரியநாச்சி அம்மன்கோயிலை சென்றடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகளும் நடந்து வந்தது. மழைவேண்டி ஆண்களும், பெண்களும் கூடை , மண்வெட்டியுடன் சென்று தம்மத்தில் மண்ணை வெட்டி கரையில் ஆழமரத்தில் கொட்டி வந்தார்கள். அம்மன் கோயிலில் கரகம் எடுத்து சூரன் குண்டு கண்மாயில் கரைத்து வந்தனர். விழாக்குழுதலைவர் வெள்ளைச்சாமி கூறியதாவது: பல நுாற்றாண்டுகளுக்கு முன் வறட்சியின் பிடியில் மக்கள் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். எங்களது முன்னோர்கள் விவசாயம் செழிக்க மழை வேண்டி கிராம தேவதைகள், காவல் தெய்வங்களையும் வழிபட்டு வந்துள்ளனர். வறட்சியான புரட்டாசி மாதத்தை தேர்வு செய்து சேங்கை வெட்டு திருவிழா கொண்டாடினர். திருவிழா நான்கு தலைமுறைகளாக தொடர்ந்து நடந்துவருகிறது. கிராம தேவதைகளை வேண்டி ஆண்களும், பெண்களும் கூடை மண்வெட்டியுடன் வந்து தம்மத்தில் மண்ணை வெட்டி கரையில் ஆழ மரத்தில் கொட்டி வருகிறோம். எவ்வளவு வறட்சியாக இருந்தாலும் சேங்கை வெட்டு திருவிழா நடந்து முடிந்ததும் மழைபெய்துவரும். சுற்று புற கிராமத்தினரும் திருவிழா முடிந்த பிறகு தான் நம்பிக்கையோடு விவசாய பணிகளை துவங்குவார்கள், இவ்வாறு தெரிவித்தார்.