பதிவு செய்த நாள்
05
அக்
2017
12:10
சிக்கல், சிக்கல் அருகே உள்ள மேலக்கிடாரத்தில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருநாகேஸ்வரர் சமேத சிவகாமியம்மன் கோயில் உள்ளது.
கோயிலின் பிரகாரம் 60 அடிவரை நீண்டு, கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம் ஆகியவை விசாலமாக உள்ளது. கருவறையில் மேல்தளம் சிறிய செங்கலால் பிரமிடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோபுர கலசம் இல்லாமல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கோயிலின் வெளிப்புறச்சுவர்கள் அனைத்திலும் வட்டவடிவ சித்திர தமிழ் எழுத்துக்களால், கல்வெட்டுக்கள் உள்ளன. கி.பி., 1236ல் மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜையும், பிரதோஷம், சிவராத்திரி விசேஷ நாட்களில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் கொண்டு வரப்பட்டது. பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் ஏதுமின்றி உள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலக்கிடாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறுகையில், தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்ட கோயிலாக உள்ளது. 1905ல் பிரிட்டிஷ் அரசால் வெளியிடப்பட்ட பழமையான கோயில்கள் குறித்த வரலாற்று ஆவணத்தில் இக்கோயிலின் வரலாற்று விபரங்கள் அச்சாகி உள்ளன. பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்குரிய மண்டபம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏதுமின்றி இருப்பதால்,வெளியூர் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கடலாடி ஒன்றிய நிர்வாகத்தினர், மற்றும் இந்துசமய அறநிலையத்துறையினர் குறைகளை சரிசெய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.