மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் வடிகால்களில் அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2017 10:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சிறு மழை பெய்தாலும் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. தற்காலிக ஏற்பாடாக வடிகால் மேற்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள சிமென்ட் சிலாப்புகளை பெயர்த்து எடுத்து அடைப்புகளை நீக்கும் பணியில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இக்கோயிலுக்குள் விழும் மழைநீர் பொற்றாமரைக்குளத்தில் வந்து சேரும்படி வடிகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. உபரி நீர் வெளியேறவும் வழித்தடங்கள் உள்ளன. இதனால் கோயிலுக்குள் தண்ணீர் தேங்காது. சித்திரை வீதிகளில் அழகுப்படுத்தும் பணிக்காக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. இதனால் கோயிலை விட சித்திரை வீதி உயரமானது. தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சித்திரை வீதிகளில் மழைநீர் வடிகால்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டன.
அடைப்புகள் பலவிதம்: சித்திரை வீதிகளில் விழும் மழை நீர் வடிகால்கள் வழியாக வெளியேறி பழைய சென்ட்ரல் மார்க்கெட் ரோடு, சொக்கநாதர் கோயில், சிம்மக்கல், திருமலைராயர் படித்துறை வழியாக சென்று அனுப்பானடி கால்வாயை அடையும் வண்ணம் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. சித்திரை வீதிகளில் உள்ள வடிகால்களின் மேல்பகுதியில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வடிகால்களில் அடைப்புகள் ஏற்பட்டாலும் கிரானைட் கற்களை பெயர்த்து எடுத்து அடைப்பை நீக்க வேண்டும். கடைகளுக்கு முன் கிரானைட் கற்களை பெயர்த்து எடுக்க உரிமையாளர்கள் பலர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் வடிகால்களின் அடைப்பு அகற்றப்படவில்லை.
கோயிலுக்குள் வெள்ளம்: இதனால் இருநாட்களுக்கு முன் பெய்த மழையால் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. மழை நீரை பம்பிங் செய்து கோயில் நிர்வாகம் வெளியேற்றியது. பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட வடிகால்கள் அவசரத்திற்கு பயன்படுத்த இயலாமல் போனது. வடிகால்களின் அடைப்புகளை அகற்றக்கோரி கோயில் இணை கமிஷனர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகரிடம் கேட்டு கொண்டார். இதையடுத்து துப்புரவு ஊழியர்கள் சிலர் வடிகால்களின் அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அரை இன்ஞ்க்்கு மண்: மாநகராட்சி செயற்பொறியாளர் சேகர் கூறுகையில், சித்திரை வீதி வடிகால்கள் வழியாக மழை நீர் வெளியேறி அனுப்பானடி கால்வாயை அடையும். வடிகால்களில் அரை இன்ஞ், ஒரு இன்ச் அளவிற்கு மட்டுமே மண் சேர்ந்துள்ளது. அவற்றை அகற்றும் பணி நடக்கிறது, என்றார்.மழைநீர் வடிகால் 6 அடி ஆழம், 3 அடி அகலம் கொண்டது. வடிகால்கள் முழுவதும் 4 அடிக்கு மண் சேர்ந்துள்ளது. சித்திரை வீதிகளில் உள்ள கடைக்காரர்கள் சிலர் பிளாஸ்டிக் கப், குப்பைகளை வடிகால்களில் கொட்டுகின்றனர். இதனால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. வடிகால்களின் சிலாப்புகளை முற்றிலும் அகற்றி விட்டு இயந்திரம் மூலம் அடைப்புகளை அகற்றினால் மட்டுமே சாத்தியம். நான்கைந்து துப்புரவு ஊழியர்களால் இப்பணியை மேற்கொள்வது இயலாத காரியம். சித்திரை வீதிகளில் மழை நீர் சேகரிக்காமல் தடுக்கும் நடவடிக்கையை கமிஷனர் அனீஷ்சேகர் மேற்கொள்ள வேண்டும். மேலும் தனி மனித ஒழுக்கமும் அவசியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.