வத்திராயிருப்பு வடக்காச்சியம்மன் கோயிலில் மதுப்பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2017 10:10
வத்திராயிருப்பு வத்திராயிருப்பு முத்தாலம்மன் தேர்திருவிழா துவங்குவதையொட்டி, வடக்காச்சியம்மன் கோயிலில் மதுப்பொங்கல் விழா நடந்தது.
இப்பகுதியின் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவின் துவக்க விழாவாக இவ்விழா கொண்டாடப்படும். இங்கு திருவிழா துவங்கிய பிறகுதான் முத்தாலம்மன் தேரோட்டத்திற்கு பறைசாற்றப்பட்டு விழா அறிவிப்பு செய்யப்படும். இந்த ஆண்டு மதுப்பொங்கல் விழா கோயிலில் துவங்கியதை தொடர்ந்து அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மாலையில் பெண்களின் பஜனை வழிபாடும், நள்ளிரவு மதுப்பொங்கல் வழிபாடு நடந்தது. கோயில் மைய மண்டபத்தில் மதுக்கலயம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் விரதம் மேற்கொண்ட சிறுமியின் தலையில் கலயம் வைத்து கோயிலை சுற்றிவரச் செய்தனர். மூன்றாவது சுற்றில் மதுக்கலயம் பொங்கி வழிந்ததை தொடர்ந்து பெண்கள் குலவையிட்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் மேளதாளம் முழங்க ஊர்வலம் நடந்தது. இதை தொடர்ந்து முத்தாலம்மன் திருவிழாவிற்கு பறைசாற்றப்பட்டது. கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன், பக்தசபா தலைவர் சுந்தர்ராஜப்பெருமாள், செயலாளர் விவேகானந்தன், மூத்த உறுப்பினர்கள் ஹரிஹரன், மகாலிங்கம் உட்பட ஊர்பொதுமக்கள்கலந்து கொண்டனர்.