பதிவு செய்த நாள்
07
அக்
2017
10:10
கம்பம்: விண்ணைத் தொடும் மலைமுகடுகள், அதில் தவழ்ந்து செல்லும் கருமேக கூட்டங்கள், வானுயர்ந்த மரங்களை உள்ளடக்கிய வனப் பகுதியில் தாலாட்டும் தென்றல், பறவைகளின் சப்தங்கள் ,செவிகளை பதம் பார்க்கும் இரைச்சலுடன் கூடியஅருவியின் ஆர்ப்பரிப்பு என சுருளி மலையின் சிறப்பம்சங்களை கூறிக் கொண்டே போகலாம். முப்பத்தி முக்கோடி தேவர்களும் நாற்பத்தி எண்ணாயிரம் கோடி ரிஷிகளும் வாழ்ந்து, இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் புண்ணிய பூமியாகும் இது.
சுருளிக்குள் நுழையும் இடத்தில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கோடிலிங்கம் கோயில். கம்பத்தை சேர்ந்த கணேசன்என்பவரை மேனேஜிங் டிரஸ்டியாக கொண்டு செயல்படும் சிவதி விஸ்வ பிரம்மா டிரஸ்ட் சார்பில் இந்த கோயில் நிர்மாணிக்கும் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து செல்கின்றனர். தாங்கள் வேண்டிய காரியம் நிறைவேறியதை தொடர்ந்தும் சிலர் பிரதிஷ்டை செய்கின்றனர். டிரஸ்டி கணேசன் கூறுகையில், “இங்கு நவபாஷான சிவலிங்கம் உள்ளது.சிவராத்திரியன்று சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தனிமனித உடலில் எட்டு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்டலிங்க பூஜை நடைபெறும். இங்கு 72 அடி உயரம் கொண்ட தியான லிங்கம்அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த லிங்கம் கட்டுமான பணிகள் நிறைவடையும் நாளில், ஆசியக் கண்டத்தில்பெரிய லிங்கம் என்ற பெருமையை பெறும். இந்த லிங்கத்திற்குள்ஆயிரத்து 500 பேர் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் மூன்று பாகங்களாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தின் முப்பெரும் தெய்வங்களானபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை குறிக்கும் வகையில் மூன்று பாகங்களாக நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. ஒருவர் இங்கு வந்து லிங்கம் பிரதிஷ்டை செய்து சென்றால், அந்த லிங்கத்திற்கு தொடர்ச்சியாக நாங்கள் பூஜை செய்வதன் மூலம் அவருக்கு வாழ்நாள் பலன் கிடைக்கும். கோடிலிங்கங்கள் பிரதிஷ்டை என்பது எனது வாழ்நாள் கனவு.அது விரைவில் நிறைவேறும். குன்றுதோறும் குமரன் இருப்பான் என்பது சிவவாக்கு. ஆனால் இங்கு குன்றுதோறும் சிவலிங்கங்களின் தரிசனம் பக்தர்களை பிரம்பிக்க வைக்கிறது. பார்ப்பவர்களை பரவசப்படுத்தவும், ஆன்மிக பிரியர்களுக்கு ஆனந்தத்தை அள்ளி வழங்கும் இந்த கோடிலிங்கம் கோயிலை தரிசிக்க வாருங்கள்,”என்றார். கூடுதல் விபரங்கள் பெற 94426 85076, 83442 43892 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.