பதிவு செய்த நாள்
08
டிச
2011
11:12
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. திரளான பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது. அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் , கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். கடந்த 5ம் தேதி, பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேரில் எழுந்தருளிய தேரோட்டம் நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னிதி உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் தீபங்கள் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு, மகா தீபம் ஏற்றப்படும். பின், தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி, பஞ்ச மூர்த்திகள் ஒன்றாக அமர்வர். மாலை 5.59 மணிக்கு, தங்க கொடி மரம் முன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார். பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் ஐந்து தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, தீப்பந்தங்கள், 2,668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காண்பிக்கப்படும், அப்போது, மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கும். தீபத் திருவிழாவை காண, தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் திரளான பக்தர்கள் நேற்று முதல் வரத் துவங்கினர். திருவண்ணாமலை கோவிலைச் சுற்றிலும் எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டமாக உள்ளது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிக்க எஸ்.டி.எப்., தீவிரம் : கடந்த 2008ம் ஆண்டு முதல், அதிரடிப்படை வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் திருவண்ணாமலை கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று நடக்கும் தீபத் திருவிழாவை முன்னிட்டு, எஸ்.டி.எப்., எஸ்.பி., கருப்பசாமி தலைமையில், 75 அதிரடிப்படை வீரர்கள், மலையில் பாதுகாப்பு மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டம் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.