பதிவு செய்த நாள்
19
அக்
2017
01:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, நாளை (அக்., 20)முதல் 26 வரை நடக்கிறது. நாளை காலை 8:00 மணிக்குஅனுக்ஞை பூஜைகளை தொடர்ந்து யாகசாலை பூஜை துவங்கும். உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டு, திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்படும். பின்பு காலை 10:00 மணிக்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். தினமும் இரவு 7:00 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பார். தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 11:00 மற்றும் மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கும். அக்.,24ல் வேல் வாங்குதல், அக்.,25ல் சூரசம்ஹாரம், அக்., 26 காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி ரத வீதிகள், கிரிவீதியில் தேரோட்டம், மதியம் 3:00 மணிக்கு மூலவர் முன் தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை தரிசனம் நடக்கும். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு அக்., 20முதல் உற்சவர்கள் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு தினமும் ஒரு அலங்காரம் நடக்கிறது. அக்., 25ல் சூரசம்ஹாரம், அக்., 26 மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.