பதிவு செய்த நாள்
19
அக்
2017
01:10
ஆரணி: ஆரணி அருகே, கே.கே.தோப்பு கிராமத்தில் உள்ள வயல்வெளியில், 1,000 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு மூலம், ஆரணி பகுதியில், அமைப்பின் தலைவரும், தொல்லியல் ஆர்வலருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். இதில், ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராம வயல் பகுதியில், பாதி புதையுண்ட நிலையில், ஒரு சிலையை கண்டறிந்தனர். அதை ஆய்வு செய்ததில், அய்யனார் சிலை என்பது தெரிந்தது. நான்கு அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட கல்லில், சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த அய்யனாரின் தலையில், அடர்ந்த ஜடாபாரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு காதுகளிலும் வட்டமான பத்ரகுண்டலம் அணிந்து, எடுப்பான மூக்கு, தடித்த உதடுகளை உடைய வாய், அகன்ற தோள் ஆகிய அம்சங்களுடன் ஜடாபாரத்தின் இடதுபுறம் பிறை நிலாவுடன் உள்ளது. கையில் உள்ள ஆயுதமான செண்டையை வலது கரத்தில் உயர்த்தி பிடித்தும், இடக்கையை நீட்டியும், அவரது வாகனமான யானையின் மீது உட்குதிகாசன் முறையில் அமர்ந்திருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. இவை, ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி கால பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை சேர்ந்தவை என தெரியவந்தது.