பதிவு செய்த நாள்
20
அக்
2017
12:10
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், இன்று, கந்தசஷ்டி விழா, யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனை விழாவுடன் துவங்குகிறது. திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா, இன்று, துவங்குகிறது. விழாவையொட்டி, காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு தினமும், காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை விழா நடக்கிறது. தினமும், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு புஷ்பம், பட்டு, தங்க கவசம், திருவாபரணம், வெள்ளி கவசம் மற்றும் சந்தனக் காப்பு போன்ற அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கும். 25ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, சண்முகப் பெருமானுக்கு, புஷ்பாஞ்சலியும், 26ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உற்சவருக்கு, திருக்கல்யாணமும் நடக்கிறது. கந்தசஷ்டி முடியும் வரை, மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில், திருத்தணி முருகன் திருவடி சபை சார்பில், பக்தி இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதே போல், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலிலும், கந்தசஷ்டி விழா, இன்று காலை துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. தினமும், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.