பதிவு செய்த நாள்
28
அக்
2017
11:10
பொன்னேரி : கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடந்தது. பொன்னேரி, திருவேங்கிடபுரம் பொன்னி அம்மன் கோவிலில், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதி உள்ளது. கந்த சஷ்டியை முன்னிட்டு, 20ம் தேதி முதல், தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கடைசி நாளில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஏகதின லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் உற்சவருக்கு திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடந்தது.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள, வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து, கல்யாண சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இரவு, 7:30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழுங்க, வண்ண வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.தடப்பெரும்பாக்கம், திருவேங்கிடபுரம், பொன்னியம்மநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், திரளாக பங்கேற்று, முருகப் பெருமானை தரிசித்தனர்.