பதிவு செய்த நாள்
31
அக்
2017
12:10
மடத்துக்குளம்: நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள பல வழிபாடுகளில் ஒன்றாக, மடத்துக்குளம் அருகே வடக்கு கண்ணாடி புத்துாரில் ரேணுகாதேவி கோவில் உள்ளது. மூன்று ரோடு சந்திப்பின் இடையில் சில மரங்களுக்கு மத்தியில் சூலம் மற்றும் வேல் உள்ளது. தரைப்பகுதியில், விளக்கு வைக்க சில செங்கல்லை வைத்து மேடை அமைத்துள்ளனர். வாரத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் மக்கள் இங்கு வந்து, வழிபடுகின்றனர். கோவில் வரலாறு குறித்து மக்கள் கூறுகையில், ’சோழர்காலத்தில் உருவான இந்த கிராமம் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்ததால் கடந்த தலைமுறையில், மக்கள் அதிகமாக வெளியிடங்களுக்கு சென்றது இல்லை. வரையறை செய்த கிராமவாழ்வில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் எதிர்காலத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்தது.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் இந்த கிராமத்துக்கு வந்த கோடாங்கி நாயக்கர் சமூகத்தை சேர்ந்த முதியவர் கிராம எல்லையில் தங்கி, மக்களுக்கு ஜோதிடம் மற்றும் குறிசொல்லி வந்தார். அவரின் கணிப்புகள் சரியாக இருந்தது. அவர் குறி அல்லது ஜோதிடம் சொல்வதற்கு முன், தனது குலதெய்வமான ரேணுகாதேவி சாமியை வழிபடுவார். பின்னர், ஜோதிடம் கேட்க வந்தவர்களும் ரேணுகாதேவி சாமியை வழிபட தொடங்கினர். முதியவர் இறந்து விட்டாலும், ரேணுகாதேவி வழிபாடு நிலைத்துவிட்டது. முதியவர் கிராமத்துக்கு வந்தது, இறந்த ஆண்டு குறித்து உத்தேசமான செவிவழி தகவல்கள் மட்டுமே உள்ளன. விளைநிலங்களுக்கு மத்தியில் வண்டிதடங்களுக்கு இடையில் ரேணுகாதேவி கோவில் இருந்தது, சிலஆண்டுகளுக்கு முன், தார்ரோடு அமைக்கும் போது, மக்கள் கோரிக்கையின் அடிப்படையில், கோவிலை அப்புறப்படுத்தாமல், ரோடு அமைக்கப்பட்டது. தற்போதும், மக்கள் வழிபடுகின்றனர்.