பதிவு செய்த நாள்
03
நவ
2017
12:11
சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஏராளமான பக்தர்கள், ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னிமலை டவுன், காங்கேயம் சாலையில் உள்ள, மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 25ல் கம்பம் நடப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜை நடந்தது. தினமும் இரவில், மாரியம்மன் பல்வேறு வாகனங்களில், திருவீதி உலா சென்றார். நேற்று முன்தினம் இரவு, மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு பூஜை நடந்தது. இந்நிலையில் பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. காலை முதலே, பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் மாரியம்மனை வழிபட்டனர். மஞ்சள் நீராட்டத்துடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் கோவில் தலைமை பூசாரி வாசுதேவன் மற்றும் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்தனர்.