பதிவு செய்த நாள்
11
நவ
2017
10:11
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர்; அடியார்களின் பாவத்தை நீக்குபவர். இன்று வாழ்வை வளமாக்கும் பைரவர் அவதரித்த பைரவாஷ்டமி நாளில், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில், கால பைரவரை வழிபாடு செய்தால், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம். சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ள, ஆறகளூர் கிராமத்தில், 1,000 ஆண்டு பழமை வாய்ந்த, காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, வேறெந்த சிவன் கோவில்களில் இல்லாத வகையில், அஜிதாங்க பைரவர், ருருவ பைரவர், சண்ட பைரவர், குரோதான பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், ஸ்ரீகாலபைரவர்’ என, எட்டு பைரவர்களுக்கு சிலைகள் உள்ளன.
சிவனால் எரிக்கப்பட்ட மன்மதன், இங்கு தான் உயிர் பெற்று, ரதியுடன் சேர்ந்து உயிர் உற்பத்தி பணிகள் துவக்கினர். அவர்களது பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில், எட்டு திசைகளிலும் பைரவர் உள்ளார். மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில், ஸ்ரீகால பைரவருக்கு, சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டு, பைரவரை வழிபாடு செய்தால், திருமணத் தடை, நவகிரக தோஷம், கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இன்று பைரவர் அவதரித்த, கால பைரவாஷ்டமி என்பதோடு, சனிக்கிழமையில் வருவதால் பல்வேறு தோஷங்கள் நீங்கும் என்பதால், சிறப்பு பூஜைகளுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சனி பகவானுக்கு குரு: அஷ்டமி திதியில் சம்பவிக்கும் சில முக்கிய நிகழ்வுகளான கோகுலாஷ்டமி, துர்காஷ்டமி, பீஷ்மாஷ்டமி போன்றவற்றிற்குச் சற்றும் முக்கியத்துவம் குறைவில்லாமல் விளங்குவது கால பைரவாஷ்டமி. இது, மகா தேவாஷ்டமி என்று வட இந்தியாவில், மார்கசீர்ஷ மாதம் தேய்பிறை அஷ்டமியின் போது அனுசரிக்கப்படுகிறது. இதுவே மகேசனின் தோற்றமான கால பைரவருக்கு உகந்த நாளாகும். பைரவர் தன்னை அண்டியவர்களுக்கு உண்டாகும் பயஉணர்வைப் போக்குபவர், கெடுமதியுடையோர் அஞ்சி நடுங்கும் வண்ணம் பயத்தை உண்டாக்குபவர். கால பைரவர் அல்லது வைரவர் என்று தமிழகத்தில் அழைக்கப்படுகிறது.
உக்ர வடிவில், அழித்தல் செயலுக்கு அதிபதியாகவும், கிராம தேவதை, ஊர்க் காவல் தெய்வம், அஷ்ட திக்குகளை இரட்சிப்பவராகவும் விளங்குகிறார். காலச்சக்கரத்தை இயக்குபவர் பைரவர். தேவிக்கு உரிய சக்திப்பீடங்களில், அவளுக்குத் துணை நின்று காப்பவராக விளங்குகிறார். தாந்த்ரீகர்களால் உபாசிக்கப்படுபவர். சைவசமய உட்பிரிவைச் சார்ந்த காளாமுகர், கபாலிகர், அகோரப் பிரிவினரால் பூஜிக்கப்படுபவர். பார்த்தாலே மனதைப் பதற வைக்கும் இவரது தோற்றங்கள். நாகங்களைக் காது குண்டலங்களாகவும், கைகளில் காப்பு, கங்கணமாகவும், கால்களில் தண்டையாகவும், மார்பில் உப வீதமாகவும் (பூணுால்) அணிந்து, இடையில் புலித்தோல் தரித்து, மானிட கபாலம் எலும்புகளை மாலையாக அணிந்து, கைகளில் சூலம், பிரம்புடனும், ஸ்வானம் (நாய்) வாகனமேறி ருத்ரரூபமாய்க் காட்சி அளிப்பார். சனி பகவானின் குருவாக விளங்குவதால், ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி பாதிப்புகளிலிருந்து மீளவைப்பவராவார்.
ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்: அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அந்நன்னாளில் நாமும் பைரவரை வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவோம் என்பது நம்பிக்கை. பொதுவாக பைரவர் தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும், நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். சிலயிடங்களில் வாகனம் இடப்பக்கம் தலை உள்ளவாறு காணப்படும். மிகவும் அதிசயமாக சிற்சில தலங்களில் மட்டும், இரு பக்கங்களிலும் நாய் வாகனங்களுடன் காட்சி தரும் பைரவர் மிக்க சக்தி வாய்ந்தவராவார். அவரைத் தொழுவது சாலச் சிறந்தது. பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிட்டும். மாலை நேரத்தில் வழிபட, செய்துள்ள பாபம் எல்லாம் விலகும். அர்த்த சாம வழிபாட்டால் மனச்சாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் வளமான வாழ்வும் பெறலாம்.