பதிவு செய்த நாள்
11
நவ
2017
12:11
திருவண்ணாமலை: ”திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவில், ’பேஸ் டிராக்கிங்’ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, குற்றவாளிகள் கண்காணிக்கப்படுவர்,” என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் டிச.,2ல் மகா தீபம் விழா நடக்க உள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. 9,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருட்டு, சங்கிலி பறிப்பு, குழந்தை கடத்தல் போன்ற குற்ற செயல்களை கண்காணிக்க, ’பேஸ் டிராக்கிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். திருவண்ணாமலை நகரின் முக்கிய இடங்கள் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட, 20 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ஏற்கனவே, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள, 12 ஆயிரம் பேரின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கணினி செயலியுடன், கண்காணிப்பு கேமராக்களில் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், குற்றவாளிகளின் நடமாட்டம் இருந்தால், அவை கண்காணிப்பு கேமராவில் பதிவாகும். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள, கணினியில் குற்றவாளியின் உருவம், கூட்டத்தின் நடுவே, தனித்த குறியீடு மூலம் சுட்டி காட்டப்படும். உடனுக்குடன் குற்றவாளியை கைது செய்ய முடியும். 3,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 16 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட உள்ளன. விழாவிற்கு வரும் வாகனங்களுக்கு, சுங்க வரி கட்டணம் வசூலிக்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரம் இயங்கும் வகையில், கட்டுப்பாட்டு அறையில் ஒன்பது பேர் பணியில் ஈடுபடுபடுவர். கற்பூரம் ஏற்றவும், மலை ஏறவும் தடை செய்யப்படுகிறது. கிரிவலப்பாதையில், குப்பையை கீழே போடாமல் பார்த்து கொள்ளுதல், அன்னதானம் செய்தல் போன்ற பணிகளில், 3,000 மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.