பதிவு செய்த நாள்
11
நவ
2017
12:11
உடுமலை: உடுமலை அருகே பழமை வாய்ந்த கோவிலை, புனரமைக்க, இந்து அறநிலையத்துறை சார்பில், தொல்லியல் துறை மூலம் கருத்துரு பெறுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. இதற்கான ஆய்வு நேற்று கோவிலில் நடந்தது. உடுமலை அருகே கோட்டமங்கலத்தில், பழமை வாய்ந்த வல்லக்கொண்டம்மன் கோவில் உள்ளது. தெற்கு நோக்கி அமைந்துள்ள இந்த அம்மன் கோவிலின் எதிர்புறம், ’மாலை’ எனப்படும் நுாற்றுக்கணக்கான சிற்பங்களை உள்ளடக்கிய வீரகம்பம் உள்ளது. அக்கம்பத்திலுள்ள கல்வெட்டை படியெடுத்த போது, கோவில், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், சுமார், 1693ம் ஆண்டு நிறுவப்பட்டது என தெரியவந்தது. பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கோவிலுக்கு, பாளையக்காரர்கள் அளித்த மானிய நிலங்கள், இந்து அறநிலையத்துறை மூலம், ஏலத்தில் விடப்படுகிறது.
பழமையான கோவில், பல்வேறு காரணங்களால், கோவில் பொலிவிழந்து, புனரமைக்கும் நிலைக்கு மாறியது. கற்களை கொண்டு அடுக்கப்பட்ட, மேற்தளத்தில் விரிசல் ஏற்பட்டது. கோபுரங்கள் பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைய துவங்கியது. தரைத்தளமும் பெயர்ந்து, பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுத்தியது. குடிமங்கலம் பகுதி மற்றும் பாளையக்காரர்கள் வரலாற்று ஆவணமாக உள்ள கோவிலை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடப்பட்டது.முதற்கட்டமாக, இந்து அறநிலையத்துறை சார்பில், கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள, கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்யப்பட்டது. வீரகம்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில், கோவிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று, கோவிலில், செயல் அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன், தொல்லியல் துறை நிபுணர் கவுதமபுத்திரன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். கோவிலின் தொன்மை, கட்டட அமைப்பு, கல்வெட்டுகள், சிற்பங்கள் உட்பட தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ’பழமையான கோவில்களை புனரமைக்க, தொல்லியல் துறை வழிகாட்டுதல் அடிப்படையிலே, கருத்துரு தயாரிக்கப்படுகிறது. கருத்துருவில், சிற்பங்கள், கல்வெட்டுகள் பாதிக்கப்படாமல், அவற்றை புனரமைப்பது குறித்த தகவல்கள் சமர்ப்பிக்கப்படும். ’கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவில் பழமையானது என்பதால், கோவிலை புதுப்பிக்க, தொல்லியல் நிபுணர் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும் அறிக்கை அடிப்படையில், புனரமைப்பு பணிகளுக்கு துறை சார்பில், நிதி ஒதுக்கப்படும் வாய்ப்புள்ளது,’ என்றனர்.