பதிவு செய்த நாள்
11
நவ
2017
12:11
நாமகிரிப்பேட்டை: கடையேழு வள்ளல்களில் ஒருவரான, வல்வில் ஓரி கட்டிய சிவன் கோவில், இந்து அறநிலையத்துறை அலட்சியத்தால், பாழடைந்து வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்டு வந்தார். இவர் கட்டிய, சீராப்பள்ளி செவ்வந்தீஸ்வரர் கோவில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு, 400க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், சிவன் கோவிலுக்கு சேவை செய்பவர்கள், தங்குவதற்கு தேவஸ்தானபுதூர் என்ற பகுதியும் தனியாக உள்ளது. இக்கோவில் கொஞ்சம் கொஞ்சமாக பாழடைந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே, கோவில் சுற்றுச்சுவர் உடைய ஆரம்பித்தது. தற்போது, நான்கு பக்கங்களில், இரண்டு பக்க சுவர்கள் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மற்ற இரண்டு பக்கமும் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. அதேபோல், நாயன்மார்கள் உள்ள ஓட்டு கட்டடமும் சேதமடைந்து, விழும் நிலையில் உள்ளது. அருகில் உள்ள முருகன் கோவில் மேல் தளம் பாழடைந்து வருகிறது. மூலவர் இருக்கும் இடத்தை தவிர, மற்ற பகுதிகள் எல்லாம் மோசமாகிவிட்டன. கோவிலை புனரமைத்து, மதில் சுவர் அமைக்க, இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்டு, புதிய வாடகையில் ஒப்பந்தம் செய்தால் வருமானமும் அதிகரிக்கும்.
இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் செல்வி கூறியதாவது: சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவில் புனரமைக்கும் பணி கண்டிப்பாக நடக்கும். இது குறித்து, நிர்வாகிகளிடம் முழு அறிக்கையும் கேட்டுள்ளோம். என்ன பணி செய்ய வேண்டும், மதிப்பீடு, நன்கொடையாளர்கள் உள்ளனரா, இந்து அறநிலையத்துறையிடம் எவ்வளவு தொகை வேண்டும் என்பது குறித்த விபரங்களையும் கேட்டுள்ளோம். அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.