பதிவு செய்த நாள்
11
நவ
2017
12:11
தஞ்சாவூர்: பந்தநல்லூர், பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆறு சிலைகள் மாயமானது தொடர்பாக, இருவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, 1,000 ஆண்டுகள் பழமையான, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில், பந்தநல்லூரை சுற்றியுள்ள, 73 கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்த பழமையான ஐம்பொன் சிலைகள், வெண்கல சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கோவில் திருவிழாக்களின் போது, அந்த சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கொண்டு வந்து வைக்கப்படும். கடந்த, 2013ல் கணக்கெடுப்பு நடத்திய போது, பாதுகாப்பாக இருந்த சிலைகளில், கீழமணக்குடி விஸ்வநாத சுவாமி கோவிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி தெய்வானை, சந்திரசேகர அம்மன் உட்பட, ஆறு சிலைகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்படி, பந்தநல்லூர் போலீசாரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பசுபதீஸ்வரர் கோவிலில், ஏற்கனவே செயல் அலுவலராக இருந்த ராமச்சந்திரன், 63, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோவில் தலைமை எழுத்தர், ராஜா, 37, ஆகியோரை கைது செய்தனர். இருவரையும், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை, 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.