பதிவு செய்த நாள்
13
நவ
2017
11:11
ஆர்.கே.பேட்டை : வெள்ளாத்தூரம்மன் கோவிலில், வரும் 18ம் தேதி, முதல் முதலாக ஊஞ்சல் சேவை துவங்க உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்தூரம்மன் கோவில். ஆர்.கே.பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம், வங்கனுார், பொதட்டூர்பேட்டை, மத்துார், புச்சிரெட்டிபள்ளி மக்களுக்கு குலதெய்வமாக வெள்ளாத்துார் அம்மன் உள்ளார். அதேபோல், ஆந்திர மாநிலம், புதுப்பேட்டை, நகரி, நாராயணவனம், பாபாநாயுடுபேட்டை, சத்திரவாடா உள்ளிட்ட , 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆடி மற்றும் தை மாதத்தில், குடும்பத்தினருடன் வந்திருந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை நடத்துகின்றனர். இது தவிர, நித்திய பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 18ம் தேதி, முதல் முதலாக ஊஞ்சல் சேவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று, மாலை, 5:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது.