பதிவு செய்த நாள்
13
நவ
2017
11:11
காஞ்சிபுரம் : இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நெய் தீபம், இரண்டு ரூபாயில் இருந்து, ஐந்து ரூபாயாக விலை உயர்த்தப்பட உள்ளது என, கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இது குறித்து, ஏகாம்பரநாதர் கோவிலில், ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீசில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுப்படி, கோவில்களில், விற்பனை செய்யப்படும், நெய் தீபத்திற்கு, தமிழக அரசின், ஆவின் நிறுவனம் மூலம், தரமான நெய் வாங்கி உபயோகிக்கும் படி உத்தரவிட்டுஉள்ளது.இந்த உத்தரவையடுத்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும், ஒரு நெய்தீபம், ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.இது சம்பந்தமாக, பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை, எழுத்து மூலமாக கோவில் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என, நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 19 ஆண்டுகளாக, ஒரு அகல் விளக்கு நெய் தீபத்திற்கு, இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது.தற்போது, 5 கிராம், நெய் விளக்கிற்கு, 2 ரூபாய், 60 காசு செலவாகிறது. ஆவின் நெய் வாங்கினால், கூடுதல் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -