பதிவு செய்த நாள்
14
நவ
2017
12:11
மடத்துக்குளம் : ‘வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என சொன்ன வள்ளலார், தனது 42வது வயதில் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். கடவுள் அருட்பெருஞ்ஜோதி வடிவானவர் என வலியுறுத்திய இவர் வடலுாரில் அணையா விளக்கை ஏற்றி வைத்தார். மடத்துக்குளம் மற்றும் சுற்றுப்பகுதியில், 18 இடங்களில் ஜ� ோதிகோவில்கள் உள்ளன. இதற்கு, தலைமையிடமாக ஐவர் மலை உள்ளது. கணியூரில் 2. 11. 1951ல் ஜோதி கோவில் தொடங்கப்பட்டது.
இங்கு முருககடவுள், வள்ளலார் மற்றும், சீடர் முருகானந்தசாமியின் உருவப்படமும் அதன்முன்பு விளக்கும் உள்ளது. இதை மக்கள் வழிபடுகின்றனர். அருகில் தனியாக உள்ள சிறிய அறையில் வள்ளலார் நினைவாக அணையா விளக்கும் உள்ளது. ஞாயிற்றுகிழமைதோறும், காலை 8:00 மணிக்கு விஷக்கடிக்கு இலவசமாக மருந்து வழங்கப்படுகிறது. பூரான் உட்பட சிறு விஷப்பூச்சிகள் கடித்தல் ,தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து மருந்தை சாப்பிடுகின்றனர். முக்கிய நா ட்களில் அன்னதானம் நடக்கிறது. நான்காவது ஞாயிற்றுக்கிழமை திருவாசம் படிக்கின்றனர். இரண்டாவது சனிக்கிழமை அகவல்பாராயணம் நடக்கிறது. விளக்கை வழிபட்ட பின்பு, பிரசாதமாக திருநீறு வழங்கப்படுகிறது. தீபாராதனை செய்யும் போதும், பிரசாதம் வழங்கும் போதும் ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ என்ற வாசகத்தையே பூசாரி மற்றும் பக்தர்கள் சொல்லி வழிபாடு செய்கின்றனர். இதுகுறித்து சங்கத்தினர் கூறுகையில், ‘கடந்த நுாற்றாண்டில் இங்கு வாழ்ந்த முருகானந்தசாமி என்ற சித்தர், ஐவர்மலை உள்ளிட்ட பலபகுதியில் தங்கி தியானத்தில் ஈடுபட்டார். அந்த காலகட்டத்தில் அவர் வழிகாட்டுதலில், இங்குள்ளமக்கள் உத்வேகம் கொண்டு, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ஏற்படுத்தினர். அன்று முதல் இந்த வழிபாடு தொடர்கிறது,’என்றனர். மடத்துக்குளம் – காரத்தொழுவு ரோட்டில் கணியூரின் தொடக்கத்தில் ரோட்டோரம் இந்த கோவில் உள்ளது. பஸ்ஸ்டாப்பில் இறங்கி நடந்தும் வரலாம்.