பதிவு செய்த நாள்
14
நவ
2017
12:11
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும், தீர்த்த குளம், தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பாததால், நகரில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் உள்ளது. திருக்கோவிலுார், பழங்காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்ததால், நாகரீகத்திலும் உயர்ந்து, மலையமாநாட்டின் தலைநகரம் என்ற அந்தஸ்துடன் ஒருகாலத்தில் சிறந்து விளங்கியது. இன்று நாகரீகம் வளர்ந்தும், நகரின் அடிப்படை வசதிகள் உயரவில்லை. நகரின் முக்கிய பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலைகள் குறுகி, நீர்வழிதடங்கள் மறிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மூலம் தென்பெண்ணையில் பெருக்கெடுத்த தண்ணீரால், திருக்கோவிலுார் பெரிய ஏரி நிரம்பி, கடல்போல் காட்சியளிக்கிறது. இங்கிருந்து தீர்த்த குளம், தெப்பக்குளங்களுக்கு செல்லும் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளதால், இரண்டு குளங்களும் வறண்டு கிடக்கின்றன. தற்போதும் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதனால் ஏரி நிறைய தண்ணீர் உள்ளது. ஆனால் குளத்தில்தான் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் நகரில் உள்ள கிணறுகளில், எட்டி எடுக் கும் அளவிற்கு தண்ணீர் இருந்த நிலை மாறி, இன்று வறண்டு கிடக்கின்றன. நகர் முழுவதும் ஆழ்துளை கிணறுகள் ஆக்கிரமித்து, நிலத்தடி நீர்மாட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஏரியில் இருந்து குளத்திற்கு வரும் பாதாள கால்வாயில் உள்ள அடைப்பை சீர்செய்ய பேரூராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை. அதே நேரத்தில் தெப்பக்குளத்தை துார்வாருவதாக கூறி, பல லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் லாபத்தொகை, இதில் கிடைக்காது என்பதால், குளத்து கால்வாயை சீரமைக்க யாரும் அக்கறை செலுத்தவில்லை என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.