பதிவு செய்த நாள்
15
நவ
2017
10:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரிய கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலில், 1997 ஜூன், 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகளை கடந்த பின்னும், மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. 1997ல், கும்பாபிஷேகத்திற்காக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டவர்கள், கருகி பலியாகினர். இதனால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை எனவும், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்கள் அனுமதிக்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பொதுமக்கள், பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, அதற்கான பணிகளை துவங்கி உள்ளோம். தொல்லியல் துறை அதிகாரிகளிடமும் பேசிஉள்ளோம்.
கோவிலில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்; பாசி படிந்துள்ள பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும் என, 25க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வைத்து உள்ளோம்.
தொல்லியல் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து, விரைவில் அனுமதி வழங்குவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.