பதிவு செய்த நாள்
18
நவ
2017
01:11
திருப்பூர் ;கார்த்திகை முதல் நாளான நேற்று, சபரிமலை ஐயப்பனுக்கு, சரண கோஷங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். சபரிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜைகள் துவங்கியுள்ளன. ஆண்டு தோறும், ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை முதல்நாளில் மாலை அணிந்து, விரதத்தை துவக்குவது வழக்கம். கார்த்திகை மாத பிறப்பான நேற்று, திருப்பூரில் ஏராளமான பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதத்தை துவக்கியுள்ளனர். திருப்பூர், காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில், 58வது மண்டல பூஜை துவக்க விழா, நேற்று நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு, கணபதி ஹோமம், பஜனை மற்றும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர். கோவில் தந்திரிகள் மற்றும் குருசாமிகள், பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர்.இதேபோல், அவிநாசி மற்றும் சேவூர் ஐயப்பன் கோவிலில், நேற்று அதிகாலை முதலே, சிறப்பு அபிஷேக , அலங்கார பூஜைகள் நடந்தன. இங்கு, ஏராளமான பக்தர்கள், சரண கோஷம் முழங்க, மாலை அணிந்தனர்.