பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை கோவிலடி ஸ்ரீசந்திரசேகர விநாயர்கோவில் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது. கும்பாபிஷேகம் எப்போது நடந்தது? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. காஞ்சி பெரியவர் சந்திரசேகரசரஸ்வதி சுவாமிகள் ஒரு காலத்தில் இங்கு வந்து தங்கி தரிசித்தார் என்ற விபரம் தெரியவருகிறது. சிவனும், பார்வதியும் அருள் சக்தி நிறைந்ததன் காரணமாக இக்கோவிலுக்கு சந்திரசேகரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலின் பாலாலய விழா நேற்று காலையில் நடந்தது. அனைவரையும் கோவில் அர்ச்சகர் நாகராஜ குருக்கள் வரவேற்றார். ஐந்து கடங்கள் வைத்து விநாயகர் ஹோமம் நடந்தது. திருப்பணி செம்மல் சுதீந்திரர் குடும்பத்தினர் சங்கல்பம் செய்து கொண்டனர். கடஸ்தாபனம் பூஜையை விசலூர் கும்பேசுவரர் குருக்கள், ஸ்ரீஐயப்ப சிவச்சாரியார் குழுவினர் பூஜை செய்து கடம் எடுத்து சென்று மூலவர், விமானம், காசிவிசுவநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. குடவாசல் ராமமூர்த்தி விநாயகரை பற்றியும் ஓங்கார விளக்கம் குறித்து பேசினார். இவ்விழாவில் சேக்கிழார் மன்ற செயலாளர் பன்னீர்செல்வம், கோவில்செயல் அலுவலர்கள் கோவிந்தராஜ், கனகசுந்தரம், ஆன்மீக அன்பர்கள் பாலகிருஷ்ணன், அ.தி.மு.க., கிளை செயலாளர் லோகநாதன், சங்கடகர சதுர்த்தி விநாயகர் வழிபாட்டு குழுவினர்கள் மற்றும் சக்கராப்பள்ளி, வழுத்தூர், மாகாளிபுரத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.